• Sat. Oct 11th, 2025

இன மத பிரதேச பாகுபாடற்ற அபிவிருத்திகளையே முன்னெடுக்கின்றேன்- கிழக்கு முதலமைச்சர்

Byadmin

Jul 29, 2017

இன மத பேதமற்ற ஆக்கபூர்வமான அபிவிருத்திகளையே தாம் முன்னெடுத்து வருவதாக கிழக்கு மாகாணமுதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

தாம் ஒரு  குறித்த பகுதிகளுக்கு மாத்திரமே அபிவிருத்திகளை முன்னெடுக்கின்றேன் என்ற தவறானஅபிப்பிராயத்தை பரப்புவதற்கு சிலர் முற்பட்டு வருவதாகவும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளுக்கு தளபாடங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து உ​ரையாற்றுகையிலேயே  கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் கூறினார்,

இதன் போது மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள 23 பாடசாலைகளுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரினால் தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர்,

சில குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள அபிவிருத்திப் பணிகளில் எனக்கு கலந்து கொள்ள கிடைப்பதால்  குறித்த பகுதிகளுக்கு மாத்திரமே அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதாக ஒரு தவறான தோற்றப்பாட்டை உருவாக்க சிலர் முயற்சிக்கின்றார்கள்.

 

வேலைப்பளு மற்றும் நேரமின்மை காரணமாக எனக்கு எல்லாப்பகுதிகளிலும் உள்ள அபிவிருத்திப் பணிகளில் பங்கேற்கக் கிடைப்பதில்லை,

 

ஆனால் நாம் கிழக்கின் மூன்று மாவட்டங்களிலும்,எல்லா ஊர்களிலும் எல்லா கிராமங்களிலும்  சமமான அபிவிருத்திகளையே முன்னெடுக்கின்றோம்,

நாம் ஒரு பகுதிக்கு மாத்திரம் தான் அபிவிருத்திகளை முன்னெடுக்கின்றோம் என்று நிரூபிக்க கூடிய உரிய ஆவணங்களோ,புள்ளிவிபரங்களோ இன்றியே இன்று எம்மீது குற்றம் சுமத்துகின்றனர்,

ஆனால் நாம் சகல பகுதிகளுக்கும் சமமான அபிவிருத்திகளை முன்னெடுக்கின்றோம் என்பதற்கான சகல ஆதாரங்களும் எம்மிடம் உள்ளன ,ஆகவே நாம் இன மத மொழி பிரதேச வேறுபாடுகளின்றி சகல பகுதிகளுக்குமான அபிவிருத்திகளை முன்னெடுத்து வருகின்றோம்,

இந்த சூழ்நிலையில் நாம் மக்களுக்காக முன்னெடுக்கும் அபிவிருத்திப் பணிகளை தடுப்பதற்கு ஒரு சாரார் கங்கணம் கட்டிக் கொண்டு செயற்படுகின்றனர்,

நாம் முன்னெடுக்கும்  அபிவிருத்திப் பணிகள் உரிய அரச பொறிமுறையின் ஊடாக அவற்றுக்கான கோரிக்கைக் கடிதங்களை தயார்படுத்தி,அது தொடர்பான திட்ட அறிக்கைகளை சமர்ப்பித்து அதன் மூலம் மக்கள் அடையப் போகும் நன்மைகளை அடையாளப்படுத்தி சகல தரவுகளையும் உள்ளடக்கி இந்த மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கின்றோம்.

 

ஆகவே எவர் தடைகளை ஏற்படுத்தினாலும் இறைவன் துணையுடன் மக்களுக்கான அபிவிருத்திகளை நாம் அவர்களுக்கு கொண்டு சேர்ப்போம் என்பதை கூறிக் கொள்கின்றேன்,

அத்துடன் அனைத்து இனங்கள் மற்றும் சமூகங்களுக்குமான நிதிகள் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதில் நாம் மிகக் கவனமாக இருக்கின்றோம்,

ஆகவே சிலர் தமது சுயலாப அரசியலுக்கு இவ்வறான கருத்துக்களை பரப்ப முற்பட்டாலும் மக்கள் மிக தௌிவாக இருக்கின்றார்கள் என்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *