• Sat. Oct 18th, 2025

புதிய ஆண்டில் பாராளுமன்ற அமர்வு குறித்த அறிவிப்பு

Byadmin

Dec 13, 2022


நாளையதினம் (13) நடைபெறவிருக்கும் பாராளுமன்ற அமர்வுகளின் பின்னர் புதிய வருடத்தின் பாராளுமன்ற அமர்வை ஜனவரி 05 ஆம் திகதி நடத்துவதற்கு இன்று (12) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் இன்று (12) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதற்கமைய அன்றையதினம் மு.ப 9.30 மணிக்குப் பாராளுமன்றம் கூடவிருப்பதுடன் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 மணி வரையான நேரம் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரையான காலப்பகுதி புனர்வாழ்வுப் பணியகச் சட்டமூலம் மற்றும் குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் சட்டமூலம் ஆகியவற்றின் இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதங்களை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

இதன் பின்னர் பி.ப 5.00 மணி முதல் 5.30 மணி வரை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

அதேநேரம், முன்னர் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய நாளையதினம் (13) மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மீறப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து, இதற்குப் பொருத்தமான பரிந்துரைகளை முன்வைப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவை அமைப்பது மற்றும், இலங்கையில் உள்ள உயர் கல்வி வாய்ப்புக்களை விஸ்தரிப்பது தொடர்பில் பொருத்தமான பரிந்துரைகளை முன்வைப்பதற்கான பாராளுமன்ற விசேட குழுவை அமைப்பது தொடர்பான பிரேரணைகள் சபையில் முன்வைக்கப்படவுள்ளன.

துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கு இளைஞர் பிரதிநிதித்துவத்தைத் தெரிவுசெய்வது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. துறைசார் மேற்பார்வைக் குழுக்களுடன் இணைந்து செயற்படுவதற்கு ஆர்வமாகவுள்ள, அந்தந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற இளைஞர்கள் தொடர்பான தகவல் வங்கியொன்றை தயாரிக்க எதிர்பார்த்திருப்பதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

இதற்காக இளைஞர் சமூகத்திலிருந்து விண்ணப்பங்களைக் கோருவதற்கு மூன்று மொழியிலும் பத்திரிகை விளம்பரங்களைப் பிரசுரிப்பதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு இணக்கத்தைத் தெரிவித்ததாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.

துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் அமைக்கப்பட்ட பின்னர் குறித்த தகவல் வங்கியிலிருந்து இளைஞர் அழைப்பதற்கும் எதிர்பார்த்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *