ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பில் சுமார் 23 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பொரளை பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொள்ளும் விசாரணைகளுக்கு அமைய இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டவர்களுக்கு இடையில் மூத்த கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தாமஸும் உள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றமும் அவரின் வெளிநாட்டுப் பயணத்தைத் தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டர் நேற்று முன்தினம் (15) பிற்பகல் பொரளை மயானத்தில் தனது காரில் கைகள் மற்றும் கழுத்து கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார்.
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அன்றிரவு உயிரிழந்தார்.
அவரது மரணம் குறித்து நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், கழுத்து நெரிக்கப்பட்டதால் மரணம் நிகழ்ந்தது தெரியவந்தது.
தினேஷ் ஷாப்டரின் உடல் கொழும்பு 07, மல்பாறையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.