• Mon. Oct 13th, 2025

தேர்தல் குறித்து உயர் நீதிமன்றத்தில் அறிவிப்பு

Byadmin

Jan 13, 2023


உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி சபை தேர்தல் நடத்துவதை நிறுத்தி வைக்க உத்தரவிடக்கோரி ஓய்வு பெற்ற இராணுவ கர்னல் டபிள்யூ. எம். ஆர்.விஜேசுந்தரவினால் முன்வைக்கப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இந்த அறிவித்தலை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு இன்று பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, எஸ்.துரைராஜா மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, இந்த அடிப்படை உரிமை மனு தொடர்பில் திருத்தப்பட்ட மனுவை முன்வைக்க அனுமதி கோரினார்.

அதன்படி, திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்ய மனுதாரருக்கு அனுமதி அளித்த உயர் நீதிமன்றம், மனுவை வரும் 18ம் திகதி விசாரணைக்கு எடுக்க உத்தரவிட்டது.

இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் சட்டமா அதிபர் ஆஜராகப் போவதில்லை தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலியா பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *