• Sun. Oct 12th, 2025

பொது நூலக அமைப்பிற்கு 30 மில்லியன் நிதி விடுவிப்பு

Byadmin

Mar 17, 2023


வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலைமைக் காரியாலய வளாகத்தில் புத்தூர் உப அலுவலகத்திற்கான நவீன பொது நுலகத்தினையும் கேட்போர் கூடத்தினையும் அமைப்பதற்கு சபை நிதியில் 30 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (16) தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் நடைபெற்றது. அதில் இவ் அறிவிப்பினை வெளியிட்டார். அவர் மேலும், எமது சபையின் இவ்வாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் 6 மில்லியன்களை ஒதுக்கப்பட்டுள்ளன.

அதுபோதாத நிலையில் கடந்த மாதம் முடிவுறுத்தறுத்தப்பட்ட இறுதிக் கணக்குகளின் பிரகாரம் 30 மில்லியன்கள் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. அரச நிறுவனங்கள் பெப்ரவரி மாத இறுதியிலேயே இந் நிதியினை இறுதியாக அடையாளப்படுத்த முடியும். இந் நிதியைப் பயன்படுத்தி ஏற்கனவே சபையில் பெறப்பட்ட தீர்மானத்திற்கு அமைய தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. முதற்கட்டமாக நிலம் ஒதுக்கப்பட்டு அமைப்பு வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளன.

இவ் அமைப்பு வரைபடம் உரிய சீராக்கங்களுக்காகவும் உறுதிப்படுத்தலுக்காகவும் பட்டய பொறியியலாளரால் உறுதிப்படுத்தல் பெறப்பட்ட பின்னர் கட்டிடங்கள் திணைக்களத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அல்லது உரிய பெறுகை சட்ட நடைமுறைகளுக்கமைய கேள்விக்கோரல் இடம்பெற்று வேலைகள் ஆரம்பிக்கப்படும்.

மேலும் எம்மால் ஒதுக்கப்பட்டுள்ள இந் நிதி வலிகாமம் பிரதேச மக்களின் பணம் என்பதையிட்டு பெருமையடைகின்றோம். நீண்டகாலமாக புத்தூர் உப அலுவலகத்திற்கு உட்பட்டு சிறந்த நூலகக் கட்டுமானத்தினை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்த நிலையிலும், நிதியை குறித்த விடயத்திற்கு ஒதுக்குவதில் பல கஸ்டங்கள் நிலவின.

எனினும் தற்போது சபையின் இறுதிக்காலத்தில் ஏனும் இத்திட்டத்திற்கான நிதியை விடுவிக்க முடிந்தது என்பதையிட்டு திருப்தியடைவதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

இவ் வேலைகளை தங்கு தடையின்றி மேற்கொள்வதற்கான அவைத்தீர்மானங்களையும் உரியவகையில் எடுக்கப்பட்டுள்ள நிலையில் உத்தியோகத்தர்களால் மேற்கொண்டு விரைவில் நுலகத்தினை அமைத்து மக்கள் மயப்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *