• Sun. Oct 12th, 2025

எந்த விடயத்தை செய்தாலும் அவதானத்துடன் செய்யுங்கள்

Byadmin

Apr 14, 2023


மலர்ந்துள்ள தமிழ், சிங்கள புத்தாண்டானது, அனைத்து மக்களுக்கும் மறுமலர்ச்சியையும், மற்றற்ற மகிழ்ச்சியையும், மன நிறைவையும், மகத்தான பல சுப விடயங்கள் ஈடேறும் ஆண்டாக அமைய, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கொவிட் – 19 பெருந்தொற்று, அதன்பின்னரான பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் தமிழ், சிங்கள புத்தாண்டை வழமைபோல் வண்ணமயமாக கொண்டாட முடியாத நிலை இலங்கைவாழ் மக்களுக்கு ஏற்பட்டது. தற்போது நிலைமை மாறிவருகின்றது. பொருளாதார நெருக்கடி தீர்ந்துவருகின்றது. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாடக்கூடிய – வரவேற்ககூடிய சூழ்நிலை உதயமாகியுள்ளது. எனவே, முன்னோக்கி செல்ல முடியும் – எல்லோர் வாழ்விலும் இன்பம் பொங்கும் என்ற நம்பிக்கையுடன் புத்தாண்டில் காலடி வைப்போம்.

ஐக்கியமே ஆக்கம். தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் மக்கள் மத்தியில் ஒற்றுமையைக் காண முடியும். குடும்ப நிகழ்வாக இருந்தால் என்ன, விளையாட்டு போட்டிகளாக இருந்தால் என்ன அனைத்து மக்களும் கூடி மகிழ்வார்கள். ஒருவருக்கொருவர் உதவிகளை செய்வார்கள். புத்தாண்டு காலப்பகுதியில் மட்டும் அல்லாமல் இலங்கை தாய் மக்களாக நாம் அனைவரும் தொடர்ந்து ஒற்றுமையாக வாழ வேண்டும்.

அதேபோல ‘ஒற்றுமை’யின் முக்கியத்துவத்தை கருதி, நாட்டை மீட்டெடுக்க அனைத்துக்கட்சிகளும் இனியாவது ஒன்றுபட வேண்டும். அதற்கான அழைப்பை இந்த நன்நாளில் மீண்டுமொருமுறை விடுக்கின்றேன். அவ்வாறு அனைவரும் இணைந்து செயற்பட்டால், அடுத்த வருடம் எல்லா வழிகளிலும் முன்னேறிய நாடாக நாம் புத்தாண்டை கொண்டாடக்கூடிய சூழ்நிலை நிலவும்.

அதேவேளை, புத்தாண்டு காலத்தில் மக்கள் சுற்றுலா செல்வார்கள், இசை நிகழ்ச்சி உள்ளிட்ட களியாட்டங்களில் ஈடுபடுவார்கள். பட்டாசுகளை கொளுத்தி வாணவேடிக்கை நிகழ்த்துவார்கள். எனவே, எந்த விடயத்தை செய்தாலும் அவதானத்துடனும், அடுத்தவர்களுக்கு தீங்கு ஏற்படாத வகையிலும் செய்யுமாறும் – செயற்படுமாறும் கேட்டுக்கொண்டு, உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன். உங்கள் எண்ணங்கள் ஈடேற இறைவனை பிரார்த்திக்கின்றேன். என்றும் நாங்கள் உங்களுடன்.” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *