• Sat. Oct 11th, 2025

மத்திய வங்கியின் ஆண்டறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

Byadmin

Apr 27, 2023


இலங்கை மத்திய வங்கியின் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கை, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (27) நிதி அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது.

இலங்கை மத்திய வங்கியின் 73 ஆவது வருடாந்த அறிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ள இது 4 பிரதான பகுதிகளைக் கொண்டுள்ளது.

அதன்படி, ஆண்டின் பொருளாதார விவகாரங்களின் நிலையை விளக்குகின்ற 8 அத்தியாயங்களையும், 30 புள்ளிவிபர அத்தியாயங்களையும் முதல் பகுதியில் உள்ளடங்குகின்றது. இரண்டாவது பகுதியானது, அரசாங்கம் மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கொள்கை நடவடிக்கைகள் தொடர்பான வர்த்தமானி மற்றும் சுற்றறிக்கைகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது.

இந்த அறிக்கையின் மூன்றாம் பகுதி, இலங்கை மத்திய வங்கியின் திணைக்களங்கள் மற்றும் அவற்றுக்குரிய செயற்பாடுகளை விளக்குவதுடன், நான்காவது பகுதியில் அரசாங்கம் மற்றும் இலங்கை மத்திய வங்கி தொடர்பான வங்கிக் கட்டமைப்பு தொடர்பான சட்டங்கள் மற்றும் கட்டளைகளின் பட்டியலை உள்ளடக்கியுள்ளது.

நாணயச் சட்டத்தின் 35 ஆவது பிரிவின்படி, ஒவ்வொரு வருடமும் அவ்வருடத்திற்குரிய பொருளாதார நிலைமைகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட கொள்கைகள் பற்றிய அறிக்கை, இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையினால் தயாரிக்கப்பட்டு குறித்த ஆண்டு நிறைவடைந்து 4 மாதங்களுக்குள் நிதி அமைச்சரிடம் கையளிக்கப்பட வேண்டும்.

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி பி.கே.ஜி. ஹரிச்சந்திர, பொருளாதார ஆய்வு மேலதிகப் பணிப்பாளர்களான கலாநிதி எஸ்.ஜெகஜீவன் மற்றும் கலாநிதி எல்.ஆர்.சீ. பத்பெரிய ஆகிய அதிகாரிகள் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *