ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் இருந்துள்ளது. விபத்துக்குள்ளான படகில் 40 க்கும் மேற்பட்டோர் பயணித்ததாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். மாலை 6 மணி வரை மட்டுமே படகு சவாரி செய்ய அரசு அனுமதித்துள்ளது. ஆனால், நாசர் என்பவருக்கு சொந்தமான ஈரடுக்கு கொண்ட அந்த உல்லாசப் படகு இரவு 7 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் 40க்கும் மேற்பட்டோருடன் புறப்பட்டுள்ளது. கடற்கரையில் இருந்து சுமார் 500 மீட்டர் சென்றபோது, இந்த படகு தலைகீழாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இரண்டு அடுக்குகொண்ட படகில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றியதும், நேரம் கடந்த பிறகு இருளில் படகு சவாரி சென்றதும் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படகில் உயிர் காக்கும் தற்காப்பு கருவிகள் எதுவும் இருக்கவில்லை. உல்லாசப் படகு கவிழ்ந்த போது அதிலிருந்த ஒருவர் கூட லைஃப் ஜாக்கெட் அணிந்திருக்கவில்லை என்பது முதல்கட்ட விசாரணையில் உறுதியாகியுள்ளது. BBC