சென்னையை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் திமிங்கலச் சுறாக்கள் கூட்டம் கூட்டமாக வருவது அண்மை காலமாக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக Tree Foundation India அமைப்பின் தலைவர் சுப்ரஜா தாரிணி தலைமையிலான குழு நேரில் சென்று திமிங்கலச் சுறாக்களைக் கண்காணித்தனர். மீன் பிடித் தடைகாலம் அமலில் இருந்ததால் இரைதேடி இவை அதிக எண்ணிக்கையில் கரைக்கு வந்திருக்கின்றன என்று சுப்ரஜா தெரிவித்தார்.
திமிங்கலச் சுறாக்கள் தெற்கு ஆப்பிரிக்காவின் ஜொஹானஸ்ப்ரக் நகருக்கு அருகில் இருக்கும் கடலை மைய இருப்பிடமாகக் கொண்டவை என்றும் அவை வருடந்தோறும் உணவு தேடி ஏப்ரலில் இருந்து ஜூன் மாதம்வரையிலான காலத்தில் ஒரு வலசைப் பாதையில் செல்லும் என்றும் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜோ கிழக்கூடன் பிபிசி தமிழிடம் கூறினார்.
இச்சுறாக்கள் மேற்கு இந்தியக் கடற்கரை மாநிலங்களான குஜராத் மற்றும் மகாராஷ்டிராவின் கடற்கரைகளுக்கருகில் காணப்பட்டன, தமிழகத்தில் காணப்படுவது மிக அரிது என்று கூறிய குறிப்பிட்ட அவர், இந்தியக் கடற்கரை நெடுக 3,000 இடங்களில் செயற்கை நீரடிப் பாறைகள் உருவாக்கப்பட்டு வருவதால், வரும் காலங்களில், பாதுகாக்கப்பட்ட விலங்குகளான இம்மீன்கள் அதிகளவில் இங்கு தென்படக்கூடும் என்றும் தெரிவித்தார்.