• Sun. Oct 12th, 2025

மருந்து தட்டுப்பாட்டைத் தவிர்க்க நடவடிக்கை!

Byadmin

Jul 14, 2023


மக்களுக்கு மருந்துகளை தாமதமின்றி பெற்றுக்கொடுப்பதை சுகாதார அமைச்சு உறுதிசெய்ய வேண்டுமெனவும், நாட்டில் உள்ள அனைத்து மருந்து வகைகள் தொடர்பிலும் வெளிப்படைத்தன்மை அவசியம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

சுகாதார அமைச்சினால் நிர்வகிக்கப்படும் விசேட இணையத்தளம் மூலம் ஒவ்வொரு வைத்தியசாலையிலும் உள்ள மருந்துகளின் அளவு மற்றும் நாளாந்தம் பெற்றுக்கொள்ளும் மொத்த மருந்துத் தொகை குறித்த தரவுகளை வழங்க வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி, இந்த வலையமைப்பு செயற்பாட்டின் உடாக வைத்தியசாலைகளுக்கு இடையில் மருந்துகளை பரிமாறிக்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

சுகாதாரத்துறை தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (14) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாட்டை உடனடியாக தீர்க்கும் வகையில் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபை சட்டத்தின் (NMRA) திருத்தம் தொடர்பான ஆலோசனைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறும் இதன்போது ஜனாதிபதி சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

தற்போதுள்ள நடைமுறையின் கீழ் ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (FDA) அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளுக்கான இந்நாட்டில் முன்னெடுக்கப்படும் மறு-அங்கீகார செயல்முறையை துரிதப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) மற்றும் ஐக்கிய இராச்சியம் (UK) ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபையின் (NMRA) செயல்முறை மூலம் கொள்வனவு செய்வதற்குப் பதிலாக நேரடியாக கொள்வனவு செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

2024 ஆம் ஆண்டு இறுதி வரை வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயதை 63 வரை நீடிக்கவும், விசேட சந்தர்ப்பங்களில் சுகாதார அமைச்சின் தேவைகளுக்கு ஏற்ப அது குறித்து தேவையான தீர்மானங்களை எடுப்பதற்கும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட உப குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுகாதார அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்

தாதியர் ஆட்சேர்ப்பின்போது கலைப் பிரிவில் கல்வி கற்றாலும் தாதியர் பயிற்சியில் உள்வாங்கக் கூடிய வகையில் விதிமுறைகள் திருத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் தடுப்பூசிகளின் தரம் தொடர்பான சிக்கல்கள் மற்றும் சுகாதார சேவை நிறுவனங்களின் ஊழியர்களின் அலட்சியத்தால் இடம்பெற்றதாகக் கூறப்படும் அண்மைய சம்பவங்கள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

அத்துடன், உரிய நேரத்தில் பணம் செலுத்துவதை உறுதி செய்தல், வேறு நோக்கங்களுக்கு நிதியை பயன்படுத்துவதைத் தடுத்தல் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தொடர்பான நிலுவைத் தொகை மற்றும் சேவை ஒப்பந்தங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

நிதி வெளிப்படைத்தன்மையை பேணுவதற்கு ஆவணங்களில் உரிய அதிகாரிகள் கையொப்பமிட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகாரசபையின் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்பிக்க திறைசேரியின் பிரதிநிதி உள்ளடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இலங்கை மருத்துவ சபையில் இதுவரை பதிவு செய்யப்படாத வைத்திய அதிகாரிகள் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் உரிய விதிமுறைகளை மீளாய்வு செய்யுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.ஜே.எஸ். சந்திரகுப்தா, திறைசேரியின் பிரதி செயலாளர் ஆர்.எம்.பி. ரத்நாயக்க மற்றும் துறைசார் அரச நிறுவனங்களின் தலைவர்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன உள்ளிட்ட சுகாதாரத் துறையின் சிரேஷ்ட அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *