• Sun. Oct 12th, 2025

Ceftriaxone தடுப்பூசி குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்!

Byadmin

Jul 15, 2023


பேராதனை வைத்தியசாலையில் தடுப்பூசி போடப்பட்டதன் பின்னர் இளம் பெண்ணொருவரின் மரணத்திற்கு காரணமான தடுப்பூசி தொகுதியின் பயன்பாட்டை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பேராதனை வைத்தியசாலை மற்றும் கண்டி வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட அந்த தடுப்பூசி தொகுதிகளின் பாவனை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன,
பேராதனை வைத்தியசாலையில் Ceftriaxone மருந்தினால் உயிரிழந்த யுவதியின் மரணம்   தொடர்பில் நான் ஆராய்ந்து பார்த்தேன். இதன்போது அந்த மருந்தை பாவனையில் இருந்து நீக்க வேண்டுமா இல்லையா என கேள்வி எழுப்பினேன். அந்த மருந்தினால் வேறு எந்த இடத்திலும் ஒவ்வாமை ஏற்படாததால் அந்த மருந்தின் பயன்பாட்டை தடை செய்யாமல் இருக்க தீர்மானித்திருந்தோம். ஆனால் தற்போது மீண்டும் அதே மருந்தை கண்டி மருத்துவமனையில் பயன்படுத்திய போது இரண்டு நோயாளிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் இந்த மருந்தை பேராதனை மருத்துவமனை மற்றும் கண்டி மருத்துவமனை உட்பட இலங்கையில் உள்ள ஏனைய மருத்துவமனைகளுக்கு 10 தொகுதிகளுக்கு மேல் விநியோகித்துள்ளோம். இப்போது கூட அந்த மருத்துவமனைகளில் இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது. மருந்து கட்டுப்பாட்டு ஆணைக்குழு, அமைச்சர், மருந்துக்கு பொறுப்பான மேலதிக செயலாளர், மருத்துவ வழங்கல் பிரிவு பணிப்பாளர் ஆகியோரின் ஆலோசனையின் பேரில், தரமான ஆய்வகத்திற்கு மருந்து அனுப்பப்படும் வரை, அந்த மருந்துப் பொருட்களின் பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.   கண்டி வைத்தியசாலை மற்றும் பேராதனை வைத்தியசாலைக்கு வழங்கப்பட்ட தொகுதிகளை பயன்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்த தீர்மானித்துள்ளோம். ஆனால் மற்ற தொகுதிகளை தொடர்ந்து பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *