• Sun. Oct 12th, 2025

அஸ்வெசும திட்டதிற்கு அரச அதிகாரிகளின் பங்களிப்பு அவசியம்

Byadmin

Jul 19, 2023


குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை வலுவூட்டவும், மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின், வழிகாட்டலுடன் ஆரம்பிக்கப்பட்ட “அஸ்வெசும” சமூக நலன்புரித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரச அதிகாரிகளின் செயலூக்கமான பங்களிப்பு இன்றியமையாதது என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றத்துக்காக எடுக்கப்பட வேண்டிய கொள்கை ரீதியிலான தீர்மானங்கள் தாமதமின்றி எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்ததுள்ள அவர், அந்த கொள்கைத் தீர்மானங்களை உரிய முறையில் எடுக்கத் தவறியதன் காரணமாகவே இந்நாடு, கடந்த காலங்களில் பல பொருளாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்ததாகவும் சுட்டிக் காட்டினார்.

“அஸ்வெசும” சமூக நலத்திட்டத்திற்கு அரச அதிகாரிகளின் பங்களிப்பு தொடர்பில் நேற்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலின் போதே சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அஸ்வெசும சமூக நலன்புரி உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் இது வரையான முன்னேற்றம் மீளாய்வு செய்யப்பட்டதுடன், சிறுநீரக நோயாளிகள், அங்கவீனர்கள் மற்றும் முதியோர் கொடுப்பனவுகளுக்காக பதிவு செய்யப்பட்ட அனைவருக்கும் அந்தக் கொடுப்பனவுகளை வழங்குமாறு சாகல ரத்நாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக இதுவரை அமுல் படுத்தப்பட்டு வந்த சமுர்த்தி அபிவிருத்தித் திட்டத்திற்குப் பதிலாக அறிமுகப் படுத்தப்பட்ட “அஸ்வெசும” சமூக நலத் திட்டத்தினை நடைமுறைப் படுத்துவதற்காக பயனாளிகளை இனங்கண்டு கொள்ளும் செயல் முறையை ஒழுங்குபடுத்த வேண்டியதன் அவசியத்தை விளக்கிய சாகல ரத்நாயக்க, இதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை கேட்டுக் கொண்டார்.

இந்த வேலைத் திட்டத்தில் இருந்து தற்போது ஒதுங்கியுள்ள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பங்களிப்பைப் பெற்றுக் கொண்டு “அஸ்வெசும” திட்டத்திற்காக இதுவரை கிடைக்கப் பெற்ற மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைத் தீர்த்து, தகுதியானவர்களை அடையாளம் காணும் பணியை துரிதப்படுத்துவது குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்த வேலைத் திட்டத்தை காலத்திற்கேட்ப நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தையும் சாகல ரத்நாயக்க சுட்டிக் காட்டினார்.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல், வடமேல் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, சமுர்த்தி அபிவிருத்தி பணிப்பாளர் நாயகம் ஆர்.பீ.பி. திலகசிறி மற்றும் அகில இலங்கை சமுர்த்தி முகாமையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *