• Sun. Oct 12th, 2025

மக்களின் மேம்பாட்டுக்காக மோடியினால் 3 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

Byadmin

Jul 24, 2023


இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களின் மேம்பாட்டுக்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி வழங்கவுள்ள 3 ஆயிரம் மில்லியன் ரூபா கல்வி மற்றும் சுகாதாரத்துறை அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும்.

இதில் மலையகத்துக்கான பல்கலைக்கழக திட்டமும் உள்ளடங்கும் – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இரு நாட்கள் இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு 21 ஆம் திகதி நாடு திரும்பிய அமைச்சர் ஜீவன் தொண்டமான், கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்தியா சென்றிருந்தோம். மலையக மக்களின் பிரச்சினைகள், அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம், எரிசக்தி மற்றும் மின்சக்தி துறைக்கான முதலீடுகள் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டன. இவை தொடர்பில் சாதகமான பதில்கள் கிடைத்துள்ளன.

இதில் குறிப்பாக மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசும் போது, வீடுகளை நிர்மாணிப்பதால் மாத்திரம் பிரச்சினை தீராவது, வீடுகள் அமைக்கப்பட்ட பின்னர் மக்களின் வாழ்வாதாரத்தை – வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும். அதற்கு கல்வியே திறந்த தேர்வாக அமையும் என சுட்டிக் காட்டியிருந்தேன்.

மலையக பெருந்தோட்ட சமூகத்தின் மேம்பாட்டுக்காக 3 ஆயிரம் மில்லியன் ரூபா வழங்கப்படும் என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. கல்வி, சுகாதார துறைக்கு அந்நிதி பயன்படுத்தப்படும்.

இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான அரச அங்கீகாரத்துடனான தேசிய விழா நவம்பரில் நடத்தப்படவுள்ளது.

இந்நிகழ்வுக்கு இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சிறப்பு தூதுவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கின்றேன்.

அதேவேளை, எதிர்வரும் 26 ஆம் திகதி சர்வக்கட்சி கூட்டத்தை ஜனாதிபதி கூட்டியுள்ளார். இதன்போது 13 தொடர்பான ஆவணம் முன்வைக்கப்பட்டு முடிவெடுக்கப்படும். ஆக மொத்தத்தில் இந்திய விஜயம் வெற்றிகரமாக அமைந்தது.” – என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *