• Sun. Oct 12th, 2025

மலையக மக்களுக்கு விரைவில் காணி உரிமை கிடைக்கும்!

Byadmin

Aug 11, 2023

“மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. நான்கு அமைச்சுகளின் செயலாளர்கள் இணைந்து இதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனவே, விரைவில் காணி உரிமை கிடைக்கும்.” என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

மலையக பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று (10) நடைபெற்ற சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“மலையக மக்கள் தொடர்பில் உறுப்பினர்கள் அனைவரும் அக்கறையுடன் கருத்துகளை முன்வைத்தனர். சிலர் அரசியல் இலாபம் கருதி கருத்துகளை முன்வைத்திருந்தாலும், மலையக மக்கள் தொடர்பான விவாதத்தில் பங்கேற்றதற்காக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இன்றைய விவாதத்தை அவதானித்தபோது மலையக மக்களுக்கு விரைவில் காணி உரிமை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. காணி அமைச்சர், தொழில் அமைச்சர், பெருந்தோட்டத்துறை அமைச்சர் ஆகியோருடனும், ஜனாதிபதியுடனும் இது சம்பந்தமாக பேச்சு நடத்தியுள்ளேன். எனது அமைச்சின் செயலாளர் உட்பட மேற்படி அமைச்சுகளின் செயலாளர்கள் நால்வரும் ஒன்றிணைந்து 10 பேர்ச்சஸ் காணிக்குரிய ஏற்பாட்டை செய்யவுள்ளனர்.

இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் தம்மை இலங்கை தமிழர்கள் என அடையாளப்படுத்தினால் அது பிரச்சினைகளை மூடிமறைப்பதாகிவிடும். கலாசார ரீதியில் நான் மலையகத் தமிழன். சட்ட ரீதியில் இந்திய வம்சாவளி தமிழர். எனவே, சனத்தொகை கணக்கெடுப்பின்போது மக்கள் இம்முறை விழிப்பாக இருக்க வேண்டும். ஏனெனில் தோட்டங்களில் வாழ்பவர்கள்தான் மலையக தமிழர்கள், ஏனையோர் இலங்கை தமிழர்கள் எனக் கருதி சில அதிகாரிகள், தவறிழைத்துவிட்டனர்.

அதேவேளை, ஜனாதிபதி நாளை மலையக எம்.பிக்களை சந்திக்கின்றார். இதில் பங்கேற்குமாறு முற்போக்கு கூட்டணியினரை அழைக்கின்றேன். இது சிறந்த வாய்ப்பு. நானும், ரமேசும் பங்கேற்பது சிக்கல் எனில் நாங்கள் பின் வரிசையில் அமர்ந்தாவது கூட்டத்தில் பங்கேற்கின்றோம். கூட்டணியினர் வரவேண்டும்.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *