• Tue. Oct 14th, 2025

சாதாரண பரீட்சையில் ஏற்படப்போகும் மாற்றம்!

Byadmin

Aug 13, 2023


எதிர்காலத்தில் கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையை  10 ஆம் தரத்தில் நடத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பு ரோயல் கல்லூரியில் நடந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்ப காலத்தில் கல்வி பொது தராதர சாதாரண பரீட்சைக்கு மாணவர்கள் 10ஆம் தரத்தில் தோற்றிய போதும் பிற்காலத்தில் அது 11ஆம் தரம் வரை நீட்டிக்கப்பட்டதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதன்படி 10 ஆம் தரத்தில் கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையை நடத்துவதற்கான வாய்ப்பு தொடர்பில் தற்போது உரிய தரப்பினருடன் கலந்துரையாடி வருவதாகவும்,  எதிர்காலத்தில் கல்வி மாற்றத்திலும் இந்த விடயம் பரிசீலிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்த செயற்பாட்டை திடீரென செய்ய முடியாததுடன்,  1, 6 மற்றும் 10 ஆகிய தரங்களில் ஆரம்பிக்கும் வகையில் ஆரம்பம், கனிஷ்ட இளநிலை மற்றும் சிரேஷ்ட இளநிலை என்ற அடிப்படையில் மூன்று வகைப்படுத்தலின் கீழ் இது மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மிகக் குறுகிய காலத்தில் மிக வேகமாக அறிவு இரட்டிப்பாகும் அறிவுச் சமூகத்திற்கு தேவையான புதுப்பிப்புகள் உருவாக்கப்பட்டு, கல்வியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதன் ஊடாக உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய பின்னர் தாம் பயணிக்க வேண்டிய எதிர்கால திசையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரமான சமூகத்தை உருவாக்கும் அடித்தளம் தயார் செய்யப்பட வேண்டும் எனவும் கல்வி அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *