கொழும்பு 7ல் அமைந்துள்ள ஜாவத்தை ஜும்ஆ பள்ளிவாயலில் குறிப்பாக ஜாவத்தை பிரதேசத்திலும் பொதுவாக கொழும்பின் ஏனைய பகுதிகளிலும் வாழுகின்ற ஏழைகளது அடிப்படையான உணவு, மருந்து,உடை தேவைகளை கருத்தில் கொண்டு இலவசமான சேவை ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- உலர் உணவு விநியோகம்
உலர் உணவுப் பொருட்களைக் கொண்ட இரண்டு அலுமாரிகள் பள்ளிவாயலுக்குள் வைக்கப்பட்டுள்ளன.
அரிசி, பருப்பு, சீனி, கடலை, இடியாப்ப மாவு, தேங்காய், பால்மாவு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இங்கு இருக்கின்றன. தேவையானவர்கள் காரியாலயத்தில் உள்ள இதற்குப் பொறுப்பான உத்தியோகத்தர்களைத் தொடர்பு கொண்டு தமது பெயர்களை பதிவு செய்த பின்னர் உணவுப் பண்டங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். ஒருவருக்கு ஒரு வாரத்திற்கு ஒரு தடவை மாத்திரமே இந்த உதவி வழங்கப்படும்.
- மருத்துவ உதவி
அதேபோல இப்பிரதேசத்தில் உள்ள வறிய முதியவர் (Senior Citizens) களுக்குத் தேவையான மருந்துகளை இலவசமாக வழங்குவதற்கான மற்றோர் ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கிறது.
அந்த நோயாளிகள் தமது வைத்தியரால் தமக்கு வழங்கப்பட்ட மருந்துச் சீட்டை (Prescription) காரியாலயத்தில் ஒப்படைத்து அந்த மருந்துகளை பாமஸியில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும். இதற்காக பள்ளிவாயலில் உள்ள உத்தியோகத்தர் நோயாளிகளை டவுன்ஹோலில் அமைந்துள்ள ஒசுசல பாமஸிக்கு அழைத்துச் சென்று மருந்துகளை கொள்வனவு செய்து கொடுப்பார்.
- ஆடை விநியோகம்
ஆடைத் தேவையுடையவர்கள் குறித்த சில ஆடைகளை காரியாலயத்தில் இருந்து பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டி இருக்கிறது. - மூக்குக் கண்ணாடி வழங்கல்
காரியாலயத்தில் ஏற்கனவே சில மூக்கண்ணாடிகள் வைக்கப்பட்டுள்ளன. கண்பார்வையில் குறைபாடு இருப்பவர்கள் கண் வைத்தியரிடமிருந்து பெற்றுக் கொண்ட(Prescription) ஐ காரியாலயத்தில் காண்பித்து தமக்குப் பொருத்தமான கண்ணாடிகள் அங்கு இருப்பின் அவற்றை எடுத்துச் செல்லலாம்.
ஆனால், எக்காரணத்தை முன்னிட்டும் ஏழைகளுக்கு கைகளில் பணம் ஒப்படைக்கப்படுவதில்லை என்று பள்ளி நிர்வாகம் தீர்மானித்திருக்கிறது.
இந்தப் பணிக்காக ஒவ்வொரு ஜும்ஆவிற்குப் பின்னரும் பிரத்தியேகமான வசூல் ஒன்றையும் நிருவாகம் செய்து வருகிறது.