• Sun. Oct 12th, 2025

ருவாண்டாவை வீழ்த்தி முதன் முறையாக ஐ.சி.சி தொடருக்கு தகுதிபெற்ற உகாண்டா

Byadmin

Dec 1, 2023

கிரிக்கெட் வரலாற்றில் புதிய திருப்பமாக, உகாண்டா கிரிக்கெட் அணி 2024 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ண தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.

டி20 உலகக் கிண்ண தொடருக்கான ஆப்பிரிக்க பிராந்திய தகுதிச் சுற்றில் உகாண்டா தனது கடைசி ஆட்டத்தில் ருவாண்டாவுக்கு எதிராக ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இடத்தை உறுதி செய்தது.

சிம்பாப்வே மற்றும் கென்யா ஆகிய இரண்டையும் தாண்டி டி20 உலகக் கிண்ண தொடருக்காக உகாண்டா தனது இடத்தை உறுதி செய்து, 20வது அணியாக  தகுதி பெற்றது.

முன்னதாக, ஆப்பிரிக்க தகுதிச் சுற்றில் நமீபியா ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று, ஏற்கனவே தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னெப்போதும் இல்லாத வகையில், 2024 டி20 கிண்ண தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன.

கிரிக்கெட் விளையாட்டை மேலும் பல நாடுகளுக்கு கொண்டு செல்லும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2022 உலகக் கிண்ண தொடரில் விளையாடிய இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகள் முதல் எட்டு இடங்களை பிடித்து தங்கள் இடங்களை உறுதி செய்தன.

ஐசிசி டி20 கிரிக்கெட் தரவரிசையில் அடுத்தடுத்த இரண்டு இடங்களில் உள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் தங்கள் இடங்களை உறுதி செய்தன.

மேலும், போட்டியை நடத்தும் நாடுகளாக மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவும் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

12 அணிகள் நேரடியாக டி20 உலகக்கிண்ண  தொடரில் பங்கேற்க தேர்வான நிலையில், எஞ்சிய 8 அணிகள் பிராந்திய அளவில் தகுதிச் சுற்று ஆட்டங்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய பிராந்தியங்களில் இருந்து தலா 2 அணிகளும், கிழக்கு ஆசியா-பசிபிக் மற்றும் அமெரிக்கா பிராந்தியங்களில் இருந்து தலா ஒரு அணியும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *