மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் வாழும் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது அந்நாட்டு அரசாங்கத்தினால் நிகழ்த்தப்படும் வன்முறைகளை நிறுத்துமாறு அழுத்தம் வழங்கக் கோரியும் ரோஹிங்யா மக்களைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தியும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு நேற்று முன்தினம் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.
கொழும்பிலுள்ள மியன்மார் தூதரகம், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம், ஐ.நா. மனித உரிமை ஆணையாளர், ஓ.ஐ.சி. எனப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமையம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி, பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் முபாரக் ஆகியோரினால் ஒப்பமிட்டு இக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, ரோஹிங்யா மக்கள் விடயத்தில் உரிய கரிசனையைச் செலுத்தி வரும் துருக்கிய அதிபர் அர்துகானுக்கு பாராட்டு தெரிவிக்கும் கடிதம் ஒன்றும் உலமா சபையினால் கொழும்பிலுள்ள துருக்கி தூதரத்தின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மியன்மார் தூதரகத்திற்கு
கொழும்பிலுள்ள மியன்மார் தூதரகத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக மியன்மாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் மனிதாபிமானமற்றதும் கொடூரம் வாய்ந்தததும் அநீதியானதுமான நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த இனச்சுத்திகரிப்பை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருமாறும் ரோஹிங்யா மக்களுக்கு பாதுகாப்பையும் நிரந்தர தீர்வையும் வழங்குமாறும் கோரிக்கை விடுக்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.நா.வுக்கு
இதேவேளை, ரோஹிங்யா மக்களைப் பாதுகாத்து அவர்களது பிரச்சினைகளுக்கு நீதியையும் நிரந்தரத் தீர்வையும் பெற்றுக் கொடுக்க முன்வருமாறு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டானியோ குட்ரஸ் மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் ஸெய்த் ராஇத் ஹுசைன் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஓ.ஐ.சி.க்கு
இதேவேளை, ஓ.ஐ.சி. எனப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமையத்தின் செயலாளர் நாயகம் கலாநிதி யூசுப் பின் அஹ்மத் அல் ஒதைமீனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், ரோஹிங்யா விவகாரத்தில் தலையிட்டு அம் மக்களுக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுத் தர முன்வருமாறு கோரப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிக்கு
அதேபோன்று, ரோஹிங்யா முஸ்லிம்கள் விவகாரம் தொடர்பில் மியன்மார் அரசுக்கு அழுத்தங்களை பிரயோகிக்க வலியுறுத்தி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இக் கடிதத்தில், இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் சகல இராஜதந்திர வலையமைப்புகள் மூலமாக மியன்மார் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்குமாறு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தாம் பாராட்டுவதாகவும் இதே முன்மாதிரியை ரோஹிங்யா மக்களின் விடயத்திலும் பின்பற்ற வேண்டும் என தாம் பிரார்த்திப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கிக்கு பாராட்டு
இதேவேளை, ரோஹிங்யா விவகாரத்தில் கரிசனையாக செயற்படுவது தொடர்பில் துருக்கி அரசாங்கத்திற்கு உலமா சபை பாராட்டுக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
கொழும்பிலுள்ள துருக்கி தூதரகத்தின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள இப் பாராட்டுக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மியன்மார் நாட்டில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக மனிதாபிமானமற்ற வகையில் இடம்பெறும் வன்செயல்கள், படுகொலைகள், வன்புணர்வுகள், இருப்பிடங்களுக்கு தீ வைத்தல் போன்ற கொடூரங்கள் தொடர்பில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா உன்னிப்பாக கவனித்து வருகின்றது.
ரோஹிங்ய அப்பாவி பொதுமக்கள் நிம்மதியான ஒரு சூழலில் பாதுகாப்பாக வாழவும், ரோஹிங்யா விவகாரம் தொடர்பில் நிரந்தரமான தீர்வுகள் பெற்றுக் கொள்ளப்படவும் வேண்டி எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியை நாடி தனியாகவும் கூட்டாகவும் பிரார்த்திக்குமாறு எமது மக்களை நாம் வலியுறுத்தியுள்ளோம். இன்னல்களில் சிக்குண்டு வாடி வதங்கும் எமது ரோஹிங்யா சகோதர, சகோதரிகளுக்காக இலங்கை நாட்டில் சிறுபான்மையாக வாழ்ந்து வரும் முஸ்லிம் சமூகமாகிய எம்மால் வருந்தவும் அவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கவும் மாத்திரமே சாத்தியமாகும்.
உங்கள் நாட்டு தலைவர் தையிப் அர்துகான், ரோஹிங்யா முஸ்லிம்கள் விடயத்தில் ஆதரவாகவும் காத்திரமாகவும் செயற்பட்டு, உலக அமைதியை விரும்பும் அத்தனை மக்களினதும் அபிமானத்தை வென்றுள்ளார் என்றால் மிகையாகது.
அரசியல் ரீதியாகவும் இன ரீதியாகவும் அடக்கி ஒடுக்கப்பட்டு வரும் ரோஹிங்யா மக்களின் சாபம் ஆங்சாங் சூகியையே சாரும். தான் பெற்ற சமாதானத்துக்கான நோபல் பரிசை திரும்பக் கையளிக்காதிருப்பது தொடர்பில் ஆங்சாங் சூகி வெட்கித் தலைகுனிய வேண்டும்.
ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் தங்கள் அனைவர் மீதும் அல்லாஹ் அருள் மழையை பொழிவானாக. இலங்கை வாழ் மக்களினது நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.