அகதிகள் தொடர்பில் நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வந்த வியூகம் மற்றும் உரிய செயல் ஒழுங்குக்கு புறம்பாக இலங்கை அரசாங்கம் ஒருபோதும் செயற்படவில்லை எனவும், எதிர்காலத்திலும் அங்கீகரிக்கப்பட்ட செயல் ஒழுங்கிலேயே நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் குடிவரவு மற்றும் குடியகழ்வு அமைச்சு தெரிவித்துள்ளது.
மியன்மார் அகதிகள் காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் முழு வடிவம்:
மியன்மாரில் சமகாலத்தில் ஏற்பட்டுள்ள நிலைமை மற்றும் ரோஹின்கிய அகதிகள் தொடர்பில் எமது சமூகத்தினுள் பல்வேறு குழுக்களினால் கடந்த தினங்களில் வித்தியாசமான எதிர் கருத்துக்கள் வெளியிடப்பட்டு பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகழ்வு அமைச்சு எனும் ரீதியில் கீழ்க்காணும் அறிக்கையினை வெளியிடுவதற்கு உத்தேசித்துள்ளோம்.
மியன்மாரில் இருந்து தப்பி சென்ற 55 ரோஹின்கிய முஸ்லிம் இனத்தவர்கள் 2008ம் ஆண்டு மார்ச் மாதம் 03ம் திகதி இலங்கை கடற்படையினரால் கடலில் காப்பாற்றப்பட்டு பின்னர் ஐக்கிய நாடுகளின் அகதிகள் தொடர்பான தூதுவராலயத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். இவ்வகதிகள் அனைவரும் 2012ம் ஆண்டு ஜுலை மாதம் நாட்டைவிட்டு வெளியேறிச் சென்றுள்ளனர்.
மீண்டும் 2013ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இரு படகுகளில் ஒரு படகில் 138 பேரும், மற்றைய படகில் 32 பேரும் என மொத்தம் 170 பேர் கடலில் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு ஐக்கிய நாடுகளின் அகதிகள் தொடர்பான தூதுவராலயத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களும் 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளனர்.
அதன் பின்னர் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் திகதி இலங்கைக்கு அருகாமையில் விபத்துக்குள்ளான படகில் உயிருக்காக போராடி கொண்டிருந்த 17 சிறுவர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட பெண்கள் 07 பேர் உள்ளிட்ட 30 ரோஹின்கிய வாசிகள் 30 பேரை கடந்த காலங்களை போல இத்தருணத்திலும் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் UNHRC மூலம் மீண்டும் பொருப்பேற்கப்பட்டனர்.
இவ்வகதிகள் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் போது அரசாங்கத்தினால் நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வந்த வியூகம் மற்றும் உரிய செயல் ஒழுங்குக்கு புறம்பாக ஒருபோதும் செயற்படவில்லை என்பதுடன், எதிர்காலத்திலும் அங்கீகரிக்கப்பட்ட செயல் ஒழுங்கிலேயே நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எம்.ஜீ. ஜயதிஸ்ஸ
தகவல் பணிப்பாளர்