கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தேறாத மாணவர்கள், உயர்தரக் கல்வியை மேற்கொள்ளும் பொருட்டு புதிய 02 பாடத்திட்டங்கள் அடுத்த மாதம் முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
’13 வருடங்களுக்கு தொடர்ச்சியான கல்வி’ என்ற வேலைத் திட்டத்தின் கீழ் குறித்த இந்த பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, தற்போது இருக்கும் உயர்தரப் பாடத்திட்டங்களுக்கு மேலாக, பொது பாடத்திட்டம் மற்றும் பிரயோக பாடத்திட்டங்கள் என்ற முக்கிய பிரிவுகள் இரண்டில் இவை கொண்டு வரப்படவுள்ளன.
இதற்கமைய, இந்த திட்டத்தின் கீழ் இரண்டு வருடங்களில், முதல் ஆறு மாதங்கள் பொதுப் பாடத்திட்டத்திலுள்ள 9 பாட விதானங்களை கற்பது மாணவர்களுக்கு கட்டாயமாகும்.
இதனையடுத்து வரும், 18 மாதங்களில் பிரயோக பாடத்திட்டத்திலுள்ள 26 பாடங்களில் ஏதேனும் ஒன்றை மாணவர்களுக்கு தெரிவு செய்து கொள்ளலாம்.
இவற்றுல் குழந்தைகளுக்கான உளவியல் மற்றும் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு, உடல் கல்வி மற்றும் விளையாட்டு, ஃபேஷன் வடிவமைப்பு, கிராஃபிக் வடிவமைப்பு, நீர் வளங்கள் தொழில்நுட்ப ஆய்வு, கட்டுமான தொழில்நுட்ப ஆய்வு உள்ளிட்ட 26 பாடவிதானங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.