கிரிக்கட் போட்டி நிர்ணய குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய பிரஜை ஒருவருக்கு கண்டி மேல் நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை பல்லேகல கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற லெஜண்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியின் போது இடம்பெற்ற ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பில் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புப் பிரிவினரால் விளையாட்டுத் துறையில் முறைகேடுகளைத் தடுக்கும் சிறப்புப் புலனாய்வுப் பிரிவுக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்த போட்டியில் பஞ்சாப் ரோயல் அணிக்காக விளையாடிய இங்கிலாந்து வீரர் மற்றும் நியூசிலாந்து வீரர் ஒருவருக்கும் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட ஆலோசனை வழங்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனடிப்படையில், இச்சம்பவம் தொடர்பில், இந்திய பிரஜை ஒருவரை குற்றவாளியாகக் குறிப்பிட்டு, ஆட்ட நிர்ணயம் மற்றும் ஆட்ட நிர்ணய ஆலோசனை தொடர்பாக கண்டி மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இது தொடர்பான வழக்கு நேற்று (27) அழைக்கப்பட்டதுடன், இரண்டு குற்றச்சாட்டுகளையும் இந்திய பிரஜை ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி மேல் நீதிமன்ற நீதிபதியால் ஒரு குற்றச்சாட்டுக்கு 5.5 மில்லியன் ரூபா வீதம், 11 மில்லியன் ரூபாவும்,
மற்றைய குற்றச்சாட்டுக்கு 10 வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட தலா 02 வருடங்கள் கடூழிய தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.