• Sat. Oct 11th, 2025

ஞானசாரருக்கு எதிரான எந்த வழக்கும், வாபஸ் பெறப்படவில்லை – சிராஸ் நூர்தீன்

Byadmin

Oct 2, 2017
ஞானசார தேரரை, சகல வழக்குகளில் இருந்தும் விடுவிப்பதற்குச் சட்டத்தில் இடமில்லை என, திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லியனகே தெரிவித்தார்.
இஸ்லாம் மதத்தையும் அல்லாஹ்வையும் அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டு வந்த ஞானசார தேரருக்கு எதிராகப் பதியப்பட்ட வழக்குகளை, திட்டமிடப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் பொலிஸ் பிரிவு, நீதிமன்றிலிருந்து வாபஸ் வாங்கியதாக, ஊடகங்களில் செய்தியொன்று வெளியாகியிருந்தது.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லியனகேவைத் தொடர்புகொண்டு கேட்டபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில், முஜிபூர் ரஹ்மான் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“நல்லாட்சி அரசாங்கத்தின் மறைமுக உதவியால், ஞானசார தேரர், ஒரே நாளில் மூன்று நீதிமன்றங்களால், வியக்கத்தக்க முறையில் பிணையில் விடுவிக்கப்பட்டார். இலங்கையின் நீதித்துறையின் செயற்பாடுகளைக் கேள்விக்குறியாக்கிய இந்த நிகழ்வுகள், அப்போதைய நீதியமைச்சராக இருந்த விஜயதாஸ ராஜபக்‌ஷவின் கபடத்தனமான செயற்பாடுதான் என்ற விடயம், வெளியாவதற்கு அதிககாலம் எடுக்கவில்லை.
“இந்நிலையில், சிங்கள ஊடகங்களில் வெளியான ‘சகல வழக்குகளிலும் இருந்தும் ஞானசார தேரர் விடுதலை’ என்ற செய்தி, முற்றிலும் திரிவுபடுத்தப்பட்ட பொய்யான செய்தியாகும்.
“ஞானசார தேரர் மீது, நான் தொடுத்த வழக்கை, பொலிஸாரால் எவ்வகையிலும் வாபஸ் வாங்க முடியாது. இந்தச் செய்தியின் உண்மைத் தன்மையை அறிவதற்கு, திட்டமிட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லியனகேவைத் தொடர்புகொண்டு கேட்டேன். ஞானசாரதேரரை சகல வழக்குகளில் இருந்தும் விடுவிக்கும் வேண்டுகோளை, தனது பிரிவு ஒருபோதும் விடுக்கவில்லை எனவும், அப்படி விடுவிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை எனவும் அவர் கூறினார்.
“மேலும், வௌ்ளிக்கிழமை வாபஸ் பெறப்பட்ட வழக்கு, பொது பல சேனாவால், ஞானசார தேரருக்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து தொடுக்கப்பட்ட வழக்கு என்றும், இந்த வழக்கை மட்டுமே போதுமான சாட்சிகள் இல்லாத காரணத்தால், திட்டமிடப்பட்ட குற்றங்கள் தவிர்ப்பு பொலிஸ் பிரிவால் வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டதாக, குறித்த பிரிவின் பணிப்பாளர் அறிவித்துள்ளார்” ​எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த இனவாதிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு, உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி, பிரதமரோடு நான் பலமுறை விவாதித்துள்ளேன்.
“நல்லாட்சி அரசாங்கம், தொடர்ந்தும் முஸ்லிம்களின் விடயத்தில் பாராமுகமாக இருந்துகொண்டு, இனவாதிகளைப் பாதுகாக்கும் மறைமுக திட்டத்தோடு தொடர்ந்தும் செயற்பட்டால், பல போராட்டங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட இந்த நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு, நான் ஒருபோதும் தயங்கப்போவதில்லை. இது, அரசாங்கத்துக்கு என்னால் விடுக்கப்பட்ட ஓர் அபாய சமிக்ஞையாகும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ஆர்.ஆர்.டி அமைப்பின் நிறுவுநரான சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் கருத்துத் தெரிவிக்கையில்,
தமது அமைப்பால் ஞானசார தேரருக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட எந்த வழக்கும் வௌ்ளிக்கிழமை விசாரணைக்கு வரவில்லையென்றும், அப்படித் தங்களால் தொடுக்கப்பட்ட வழக்கை வாபஸ் வாங்குவதற்கு பொலிஸாருக்கோ வேறு யாருக்குமோ எந்தவித அதிகாரமும் இல்லையென்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *