அன்புக்கும் காதலுக்கும் காலம் ஒரு அளவுகோல் இல்லை
குறுகிய காலத்தினுள் வாழ்வின் இறுதி நொடி வரை மறக்க முடியாக் காதலை தருவோரும் உண்டு
நெடுங்காலமிருந்தும் வெறும் உடல் மட்டும் ஒட்டி உள்ளத்திலிருந்து அன்பு செய்யாமல் இருப்போரும் உண்டு
அவசர அவசரமாய் நீங்கள் ஊட்டி விடும் காதலை அன்பை கைகழுவி விட்டு நீங்கள் வெற்றுத் தட்டைக் நீட்டும் போது
உங்களால் ஊட்டப்பட்ட பசித்தவர்களின் கண்களிலிருந்து குருதி வழிவதை கண்டிருக்கிறீர்களா
உங்களை நெருங்கவும் முடியாமல் அவர்களின் பசியும் அடங்காமல் அன்பின் திருவோடுகளை ஏந்தி
உங்கள் முன்னால் மண்டியிட்டிருப்பவர்களை ஏரெடுத்தும் பார்த்திருக்கிறீர்களா
உனக்கென இறுதி வரை நான் இருப்பேனென்று அவர்களுக்குத் தந்த காதல் வாக்குறுதிகளை நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா
உங்கள் சூழ்நிலைகளை உங்கள் சிக்கல்களை உங்கள் பிரச்சனைகளை கைகளில் வைத்துக் கொண்டுதான் அவர்களை நேசிக்கவே துவங்குகிறீர்கள்
உங்கள் நிலையோடே திகட்டத் திகட்ட அன்பைப் பொழிந்து விடுகிறீர்கள் அதே நிலையை காரணியாக்கி அவர்களை அனாதையாக்கி விடுகிறீர்கள்
நிதானியுங்கள்
அன்போ காதலோ நேசமோ தயை கூர்ந்து நிதானியுங்கள்
பசைகளை ஊற்றி உடைந்ததை ஒட்டிக்கொள்ளவும் ஊசி நூல் கொண்டு கிழிசலைத் தைத்துக் கொள்ளவும்
பொருளோ துணியோ அல்ல மனித மனம்.
- ஹிதாயத்.