• Sat. Oct 11th, 2025

விவாகரத்து

Byadmin

Oct 28, 2024

“ஒத்து வரவில்லை என்றால் விவாகரத்து வாங்கி விடுங்கள் ” என்று பேசுவது சர்வ சாதாரணமாகிவிட்டது இப்போது !🧡✨

மிக கொடூர சூழலில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு விவாகரத்து தேவையே ! அதில் மாற்று கருத்து இல்லை.

ஆனால் அன்பில் இசைந்து செல்ல வேண்டிய விஷயங்களுக்கு கூட ஈகோ பார்த்துக் கொண்டும், குடும்ப உறவுகளின் வற்புறுத்தலுக்கும் நண்பர்களின் தேவையற்ற ஆலோசனைகள் ஆகியவை இளம் வயதினர் அதிகம் விவாகரத்தை நாடி செல்ல காரணமாகி விடுகிறது. ஆணைச் சார்ந்து பெண் வாழும் சுழலும் இப்போது இல்லை.

இது மிகப் பெரிய காரணம் எனலாம்.

“உனக்கு என்ன கை நிறைய சம்பாதிக்கிற.

உன்னால் உன்னையும் உன் பிள்ளைகளையும் பார்த்துக் கொள்ள முடியும். யோசிக்காதே.

தைரியமாய் முடிவெடு” என்று ஆலோசனைகள் அதிகம் கொடுத்து கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பணம் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமே வாழ்க்கை இல்லை. அதையும் மீறி பல விஷயங்கள் இருக்கின்றது.

உங்களுக்கு வேறுறொரு கணவன் கிடைக்கலாம்.அல்லது கணவனென்றால் வேறொரு மனைவி கிடைக்கலாம்.

ஆனால் உங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் அப்பாக்களோ அல்லது அம்மாக்களோ நிச்சயம் கிடைக்க மாட்டார்கள்.

பார்ன் சுவாலோ என்ற சின்னச் சிறு பறவையினம் இனப்பெருக்கத்திற்காக 8300 கி.மீ.,கடலின் மீது பயணம் செய்கிறது. அர்ஜென்டினாவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வந்து போக, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைப்பரப்போ கிடையாது! அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும்போது, சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன. எப்பொழுதெல்லாம் அவற்றிற்குப் பசியும் களைப்பும் ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வந்து, அலகில் கவ்விய குச்சியை கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்று கொண்டு இரை தேடிக் ஓய்வெடுத்து பறந்து வேறொரு நாட்டில் தன் இனத்தை விருத்தி செய்துக் கொண்டு அங்கிருந்து மீண்டும் கடலின் மேலே தன் குஞ்சுகளுடன் பயணம் செய்து தன் சொந்த நாட்டை அடையும்.

ஒரு நல்வாழ்வை தன் குஞ்சுகளுக்கு கொடுக்க ஒரு பறவை இவ்வளவு போராடுகிறது. பேரன்பு இருந்தால் மட்டுமே இந்த பயணம் சாத்தியம்.

சிறு சிறு விஷயத்திற்கும் சண்டையிட்டுக் கொண்டும், சகிப்புத் தன்மை அற்றும் அல்லது பிற ஈர்ப்பில் மனம் மயங்கியும் ஏன் இந்த வாழ்வை தொடருகிறோம் என்று கசப்புடனும் இருக்கும் தம்பதியினர் அனைவருமே இந்த பறவையின் பயணத்தில் கற்றுக் கொள்ள நிறையவே உள்ளது.

தன் இனத்தை நல்லவிதமாக உருவாக்குவதில் இத்தனை போராட்டங்கள் ஒரு பறவையின் வாழ்விலேயே உண்டென்றால் மனித வாழ்வில் இதைக்காட்டிலும் அதிக போராட்டங்கள் இருக்கும்.

சிலர் பெண்களிடம் பெண்ணியம் பெண் விடுதலை என்று அதிகம் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள் ஆணாதிக்கம் மிகுந்த ஆண்வர்க்கம் என்றால் அவள் மீண்டும் வாழ்வை பெற்றுக் கொள்ள காத்திருக்கும் வர்க்கமும் இதே ஆணாதிக்கம் மிகுந்த ஆண்வர்க்கம்தானே. மாற்றப் படவேண்டியது மனங்களே. எதையும் எதிர் கொள்ளும் தைரியம்தான்.

தன் கணவனிடமே தன் சுயத்தை நிரூபிக்க முடியாமல் தோல்வியுறும் பெண் வேறு ஒரு ஆணிடம் தன் சுதந்திரத்தை எப்படி மீட்டெடுப்பாள்?

அதே போன்று ஒரு பெண்ணிடம் அன்பை பெற சக்தியற்ற ஒருவன் வேறொரு பெண்ணில் தன் அன்பை எப்படி பெற முடியும்?

அனைவரிடமும் சிறு சிறு அளவில் அல்லது பெரிய அளவிலும் குறைகள் இருக்கலாம்.பேரன்பு கண் கொண்டு காணில் அனைத்தும் சாத்தியமே !

மேலைநாடுகள் போல் சுதந்திர வாழ்வு அல்லது வேறு துணை தேடிக்கொள்ளுதல் என்று இப்போது மேற்கோள் காட்டிக் கொண்டிருக்க இயலாது.

குடும்பம் அமைப்பினை தொலைத்து வெளியில் தேடியவர்கள் இப்போது மகிழ்ச்சி என்பது அவரவர் குடும்பத்தில் மட்டுமே சாத்திய படும் என்ற உண்மையை உணர்ந்து ‘ஒரே பெற்றோர்’ என்ற வாழ்வை பிள்ளைகளுக்கு கொடுக்க துவங்கி இருக்கிறார்கள்.

அங்கு சில கீழ் தட்டு மக்களே விவாகாரத்துக்கள் இன்னும் அதிகமாக பெற்றுக் கொண்டிருக்கின்றனர் என்று கூறுகிறார்கள்.

இனம் காப்பதில்,துணையை தேர்வு செய்வதில் பிற உயிரினங்களுக்கு இருக்கும் தெளிவு நமக்கு இருக்கிறதா என்று சுய பரிசோதனை செய்துக் கொள்வோம் ! அறிவென்பது மகிழ்ச்சியை இருக்கும் இடத்திலேயே உருவாக்கிக் கொள்ளுதலிலும் அதற்கேற்ப மாற்றங்களை அழகாய் கொண்டு வருவதிலும் அடங்கும்தானே !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *