• Sat. Oct 11th, 2025

முடிந்தவரை சுயநலமற்று வாழுங்கள்.. முடியவில்லை என்றால் முயலுங்கள்…!!

Byadmin

Oct 28, 2024

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். தாகத்தால் உயிர் போய்விடுமோ என்று நினைத்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.

அங்கே ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப்பும், அதன் அருகில் ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். “ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்.”

அந்தப் பம்ப்போ மிகவும் பழையதாக இருந்தது. அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.

அவன் யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்தப் பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால், இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போகத் தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது.

அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.

நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்தக் காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது.

நமக்கு முன் பல்லாயிரம் தலைமுறைகள் வாழ்ந்துள்ளார்..

ஒரு தலைமுறையினால் அடுத்து வந்த தலைமுறைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
தாங்கள் அனுபவித்த விடயங்களை அடுத்த தலைமுறைக்கு அப்படியே விட்டுச்சென்றனர்.

இதில் நாம் மட்டுமே விதிவிலக்கு..

நாம் சிறு வயதில் அனுபவித்த சுதந்திரம், பசுமையான சுற்றுப்புறம், வீதிகளில் விளையாட்டு, தடையில்லா குடிநீர், கூட்டுக்குடும்ப வாழ்க்கை என சொல்லிக்கொண்டே போகும் எதையும் நம் குழந்தைகள் அனுபவிக்க முடியவில்லை.
பச்சிளம் வயதிலேயே மன அழுத்தம் ஏற்பட்டு, வியாதிகளும் பெருகிவருகிறது..

இதற்கு காரணம் அந்த குழந்தைகளா.. நம்முடைய குறுகிய மனப்பான்மை மட்டுமே.. நம் செய்யும் சிறிய தவறுகளே சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது..

தற்போது விழிக்காவிட்டால் மனித குலமே புவியில் இருக்காது..

முடிந்தவரை சுயநலமற்று வாழுங்கள்.. முடியவில்லை என்றால் முயலுங்கள்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *