• Sat. Oct 11th, 2025

அணுகுமுறை

Byadmin

Oct 28, 2024

ஒரு ஊரில் ஒரு ஆள் தையல் கடை வைத்திருந்தான்.

அவனிடம் ஒருவன் ஒரு சட்டை துணி எடுத்துக் கொடுத்து தைக்க சொல்லியிருந்தான்.

வருகின்ற சனிக்கிழமை வந்து வாங்கிட்டு போ என்று அவன் சொல்லியிருந்தான்.

அதே மாதிரி இவன் வந்தான்.

அவன் தைத்து வைத்திருந்த சட்டையை கொடுத்தான்.

இவன் வாங்கி அங்கேயே போட்டு பார்த்தான்.

கை நீளம் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருந்தது.

வலது கை இடது பக்கத்தை விட நீளம் குறைவாக இருந்தது.

என்ன இது இப்படி செய்து விட்டாய்? என்று இவன் முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டான்.

அதற்கு அவன் சொன்னான் ஐயையோ! இதற்காகவா சங்கடப்படுகிறாய்!

வலது கையை மட்டும் கொஞ்சம் உள்ளே இழுத்து வைத்துக்கொள் சரியாகப் போகிறது.

மற்றபடி இந்த சட்டையில் உள்ள கலை அம்சத்தை கவனித்து பார்.

எவ்வளவு அற்புதமாக செய்திருக்கிறேன்.

ஒரு சின்ன குறையைப் பொருட்படுத்தாமல் நான் சொன்னது மாதிரி கையை கொஞ்சம் உள்ளே இழுத்து வைத்துக் கொள்.

நடந்து போ அருமையாக இருக்கும் என்றான்.

அவனும் யோசித்துப் பார்த்தான் சரியான யோசனையாக தோன்றியது.

கொஞ்சம் முயற்சி செய்து வலது கையை உள்ளே இழுத்து சட்டை சரியாக இருப்பது போல் பண்ணிக்கொண்டான்.

இப்போது மறுபடியும் ஒரு பிரச்சனை வலது கையை உள்ளே இழுத்து வைத்துக்கொண்டால் முதுகுப்பக்கம் கொஞ்சம் துணி தளர்த்தியாக தொங்குவது மாதிரி இருந்தது.

என்ன இது முதுகுப்பக்கம் துணி குவிந்து விட்டது என்றான்.

அவன் இதற்காகவா கவலைப்படுகிறாய்?

உடம்பை அதுக்கு தகுந்த மாதிரி கொஞ்சம் வளைத்துக் கொள் சரியாக போய்விடும்.

இதற்காக அந்த அழகான தையலைப் பிரித்து அதில் உள்ள கலை அம்சத்தை கெடுக்க என் மனசு இடம் கொடுக்கவில்லை.

எவ்வளவு தளர்ச்சியாக இருக்குதோ அவ்வளவுக்கு கொஞ்சம் உடம்பை வளைத்து கொள் என்றான் தையல்காரர்.

அதுவும் நல்ல யோசனையாக தோன்றியது சரி என்று சொல்லி விட்டு புறப்பட்டான்.

தெருவில் இறங்கினான்.

கொஞ்சம் கையை உள்ளே இழுத்து உடம்பை கொஞ்சம் வளைத்துக் கொண்டான்.

சட்டைக்கு தகுந்த மாதிரி பண்ணி கொண்டான்.

மெதுவாக நடந்து போனான் இப்போது எதிரில் ஒருவன் வந்தான்.

இவனைப் பார்த்தான் ” ஆஹா அற்புதம் என்ன அழகான சட்டை சும்மா சொல்லக்கூடாது.

ரொம்ப நல்லா இருக்கிறது.

நிச்சயமாக இந்த ஊர் மேல் தெருவில் உள்ள தையல்காரர்தான் இதை தைத்திருக்க வேண்டுமென்றான்”.

இதைக் கேட்டதும் அவனுக்கு ஆச்சர்யம்!

அதெப்படி அவ்வளவு சரியாக சொல்கிறாய்? என்று கேட்டான்.

அதற்கு அந்த வழிப்போக்கன் ” அவன் ரொம்ப கெட்டிக்காரன் உன்னைப்போல் உடம்பும் கையும் வளைந்து போன ஒரு ஆளுக்கு அவனைத் தவிர வேறு யாரால் இவ்வளவு பொருத்தமான சட்டை தைக்க முடியும்? “என்றான்.

தையல்காரன் பேச்சை கேட்டு அனுசரிக்க போய் இவனோட நிலைமை இப்படி ஆகிவிட்டது.

இதே மாதிரிதான் சில விடயங்கள் நம்மையும் கோமாளி ஆக்கிவிடும்.

எதுவாக இருந்தாலும் அந்த விடயத்தில் ஒரு அறிவுப் பூர்வமான அணுகுமுறை நிச்சயம் அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *