அவ தன்னோட அம்மாவுக்குப்போன் பண்ணினா ”அசதி அசதியா வருது ஒடம்பு ரொம்ப வீக்காயிருச்சுன்னு நெனைக்கிறேன் தினம் காலையில எந்திரிச்சா ஒவ்வொருத்தரா ரெடி பண்ணி அனுப்பிச்சிட்டு அதுக்கப்புறம் குளிச்சிட்டு சாப்புட மணி 10 ஆயிறது , ஏதோ வயித்துக்கு போட்டுட்டு துணிமணிய வாசிங்மிசின்ல போட்டுட்டு பாத்திர பண்டம் கழுவி வைச்சிட்டு அப்பாடான்னு செத்த கண்ணசந்தா பள்ளிக்கூடம் விட்டு ஒவ்வொன்னா திரும்பி வந்துருதுக”
”திரும்ப அதுகளைக் கவனிச்சி நைட்டுக்கு சாப்பாட ரெடி பண்ணிட்டு ஒக்காற முன்ன அவர் வந்துருறாரு திரும்ப எல்லாத்துக்கும் சாப்பாடப்போட்டுட்டு பாத்திரம் பண்டம் கழுவி வைச்சிட்டு வாசிங்மிசின்ல போட்டதை எடுத்துக் காயவைச்சிட்டு இல்ல செல நேரம் ஏற்கனவே காயப்போட்டதை எடுத்து மடிச்சி வைச்சிட்டு பாத்தா ராத்திரி 10 ஆயிடுது “
”அப்பாடான்னு படுத்தா எங்க தூக்கம் வருது தூக்கம் வந்து அசந்து தூங்குறப்ப மறுநாள் காலையில அலாரம் அடிச்சிருது என்னா வாழ்க்கை எரிச்சலா வருது என்னா பண்ணுறதுன்னு தெரியலம்மா ”நு பொலம்புனா
அதுக்கு அவளோட அம்மா சொன்னா
” நான் நேரவாறேன் உன்னையும் பாத்தமாதிரி இருக்கும் ஒனக்கு ஆறுதலும் சொன்ன மாதிரி இருக்கும் வாறேன் நாளைக்கி” என்றாள்
மறுநாள் மேலே சொன்ன வேலையெல்லாம் முடிச்சிட்டு வாசிங் மிசின ஆன் பண்ணும் போது வாசலில் மணியடிக்கப் போய் பார்த்தால் சொன்ன மாதிரியே அம்மா வந்துட்டாங்க, ஆசையாக் கட்டிப்புடிச்சி வரவேற்றாள் இவள்
இவளைப்பாத்துட்டு அம்மா
“ என்னாடி இப்புடி எளைச்சிட்ட ஒழுங்கா சாப்புடுறீயா இல்லையா துரும்பா எளைச்சிட்டே காணச்சகிக்கல” என்றாள்
” இல்லம்மா நான் அப்புடியேதானிருக்கேன் ரொம்பநாள் கழிச்சிப்பாக்குறதால ஒனக்கு அப்புடித்தோணுது அது ஒன்னோட அன்பு “
“இல்லடி உண்மையிலயே நீ எளைச்சித்தானிருக்க சரி காலையில சாப்பிட்டாயா என்ன சாப்பிட்ட”
”இல்லம்மா வேலையெல்லாம் முடிஞ்சி இப்பத்தான் வாசிங் மிசின் போட்டேன் அதுக்குள்ள நீ வந்துட்ட இரு போய் காபி போட்டு எடுத்துட்டு வாறேன்” என்று சொல்லி அடுப்படியை நோக்கி நகர்ந்தாள்
“ நீ என்ன டிபன் பண்ணுனே அதை எடுத்துட்டு வா அப்புறமா காபி சாப்பிடலாம்” நா
இவள் உள்ளே போய் இட்லிகளும் அதுக்கு சட்ணியும் எடுத்து வந்து அம்மாவிடம் கொடுத்து
”சாப்புடும்மா’ என்றாள்
அம்மா இவளின் கையைப்பிடித்து உட்காரவைத்து” டிபன் எனக்கில்லை ஒனக்குத்தான் நீதான் பசியோட இருப்ப காலையில இருந்து ஒன்னும் சாப்புடாம நான் சாப்பிட்டு வந்துட்டேன் இந்தா சாப்புடு நான் ஊட்டிவிடுறேன்னு ”சொல்லி ஊட்டி விட கண்கள் கசிந்தன இவளுக்கு
அப்ப அம்மா சொன்னாள் ”நீ சொன்னதில இருந்து நான் தெரிஞ்சிக்கிட்டது நீ உன் குடும்பத்தை நேசிக்கிற அளவுக்கு ஒன்னை நேசிக்கலன்னு தெரியுது ” என்றாள்
“ நான் எப்படி என்னை நேசிக்காமல் இருக்கமுடியும் ரொம்ப விரும்புறேன் என்னை” என்றாள்
“உன் வாய்தான் அப்படிச்சொல்லுது ஆனால் உன்னை நீ நேசிக்கவில்லை அப்படி இருந்துச்சுன்னா காலையில இருந்து சாப்பிடாம இருப்பியா உன் வயிறு என்ன பாவம் பண்ணிச்சி அதுக்கு ஏன் தினம் தண்டனை கொடுக்கிற “ என்றாள்
” பிள்ளை புருசன் நு கவனிச்சிட்டு சாப்பிடுறதுக்குள்ள நேரம் ஆயிடுறது” என்றாள்
” நீ நெனைக்கிற நீ தியாகம் செய்யிறதா ஆனா அது உனக்கும் உன் குடும்பத்துக்கும் இழைக்கிற துரோகம், நீ நல்லா இருந்தாத்தாத் தான் உன் குடுமபம் நல்லாருக்கும் . நீ படுத்துட்டன்னா உன் குடும்பம் என்னாகும் நல்லா யோசனை பண்ணு”
அதைக்கேட்டு தலை கவிழந்தாள் இவள்
அப்ப அம்மா சொன்னாள்
“ காலையில எந்திரிச்சயா ஒரு காபி இல்ல பாலைக்காச்சி நீ மொதல்ல குடிச்சிட்டு மத்த வேலையைக் கவனி”
அடுத்து டிபன் செய்யிறயா அதுல கொஞ்சம் சாப்பிட்டுப்பாத்து அப்புறம் பிள்ளைகளுக்குக் கொடு முதல்ல உன்னைக் கவனி அப்புறம் எல்லாத்தையும் கவனி இந்த ஒடம்பு நமக்குக் கெடைச்சிருக்கிற வரம் அதை கஸ்ட்டப்பட விடக்கூடாது பசில வாட்டக்கூடாது அது நல்லா இருந்தாத்தான் எல்லாம் நல்லா இருக்கும்
”உடம்பை வளர்த்தேன் உயிரை வளர்த்தேனே” நு திரு மூலர் சொல்றார். இது ஆண்களுக்கு எவ்வளவு முக்கியமோ அதைவிடப் பெண்களுக்கு ரொம்ப முக்கியம் ஏன்னா நமக்குத்தான் ஒடம்புல ”ஏகப்பட்ட தொந்தரவு ” ”மாதாந்திரப்பிரச்சனைகள்” அப்புறம் வயசானா ”மோனா பாஸ் பிரச்சனை”ன்னு இருக்கே அதைத் தாங்க ஒடம்புல சக்தி வேணாம் , பிள்ளைகளுக்கு முன்னாடி நாம சாப்பிடுறதான்னு நெனைக்காத, அவங்களைக்கவனிக்க நீ இருக்கனும் உன்ன நீதான் கவனிக்கனும்”
“ இதைச் சுயநலம்னு செலபேர் சொல்லுவாங்க ஆனா இது குடும்பத்தின் நலம் உள்ளடங்கிய சுயநலம் இதுதான் குடும்பத்த்க்கு நல்லது ஒனக்கும் நல்லது” என்று சொல்லி இவளின் தலையைத் தடவிக்கொடுத்துச் சொன்னாள்
“ அம்மாக்களுக்கு எப்போதும் பிள்ளைகள் குடும்பம் என்ற கவலை இருக்கும் என்னதான் நீ குடும்பத்தலைவி ஆயிட்டாலும் எனக்கு நீ இன்னமும் சிறு கொழந்தைதான் நான் ஒனக்கு அம்மாதான் ஒன்ன ப்பாத்து எனக்கு கண்ணு கலங்குது இப்புடி எளைச்சிட்ட மொதல்ல நல்லதைப் பொல்லதை வாங்கிட்டு வந்து ஒனக்கு சமைச்சிப்போட்டுட்டு உன்ன சரி பண்ணிட்டுத்தான் போவேன் “என்றாள்
மறுநாள் காலை அம்மாவே எல்லாம் செய்து விட்டு இவளைச்சாப்பிடச்சொன்னாள்
அப்ப இவள் கேட்டாள்
” அம்மா எனக்கு நீ சொன்னதை நீ கடைப்பிடிக்க வில்லையே நீ மொதல்ல சாப்பிடு மகன்னு வரும்போது நீயும் என்ன மாதிரி ஆயிடுறீயே நீ சாப்பிட்டாத்தான் நான் சாப்பிடுவேன் என்றாள் பொய்க்கோபத்துடன்”
அப்ப அம்மா மென்மையாகச் சிரித்துவிட்டுச் சொன்னாள் உபதேசம் ஊருக்குத்தாண்டி ஒனக்கும் எனக்குமில்ல ந்றது சரியாத்தான் இருக்கு அம்மாக்கள் இதைச்செய்வதால் தான் அவளின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது அம்மா என்னிக்குமே அம்மா தான் என்றாள் கண்கள் லேசா கலங்க “
இவளின் கண்ணும் கலங்குச்சு
ஏன்னா அம்மாவின் அம்மா சின்ன வயசியிலயே எறந்துட்ட நெனப்பு வர.
அ.முத்துவிஜயன்