அதில் ஒரு விஷயம் நினைத்த நேரம்“சாப்பாடு போடு” என்று வீட்டுப் பெண்களை உத்தரவிடுவதால் அவர்கள் எவ்வளவு பாதிக்கபடுகிறார்கள் என்பது.
பெண் காலையில் தோசை சுட்டுக் கொடுத்துக் கொண்டிருப்பாள்.
கணவன் ஏதோ ஒரு வேலையில் இருப்பான். மனைவி சாப்பிடுங்க என்று சொன்னால்
“ இரு இரு இந்த வேலையை முடிச்சிட்டு வந்திர்ரேன். இந்த புரோகிராம் முடியட்டுமே, சாப்பிடுற மூட் இல்ல. அரை மணி நேரம் போகட்டுமே” என்பான்.
மறுபடி அரை மணி நேரம் பிறகு கல்லை வைத்து சூடாகும்வரை காத்திருந்து மாவை ஊற்றி, தோசை வேகும் வரை காத்திருந்து, அதை தட்டில் போட்டு சட்னி எல்லாம் ஊற்றி அவனுக்கு கொடுக்க வேண்டும்.
( ஊட்டி விடாத குறை தான் ! இதில் நெய் தோசை ஊற்று, பொடி தோசை
போடு முட்டை தோசை கொடு என்று அலப்பறை வேற )
அனைவருக்கும் தோசை சுட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே ஐந்து நிமிடம் நேரமெடுத்து கூடவே சாப்பிட்டிருந்தால் பெண்ணுக்கு எளிதாக இருந்திருக்கும்.
ஆனால் இது பல ஆண்களுக்கு தெரியாது.
அதுவும் இளைஞர்களாக இருக்கும் ஆண்களுக்கு சுத்தமாக இந்த அறிவு கிடையாது.
சொந்தக்காரர்கள் வீட்டில் இருக்கும் போதும் இப்படி செய்வார்கள். மதியம் இரண்டரை மணிக்கு அந்த குடும்பத்தலைவி வேலை எல்லாம் செய்து கொஞ்சம் படுத்து ஒய்வு எடுக்கலாம் என்று போகும்போது
“சித்தி சாப்பாடு போடுங்க. பெரியம்மா சாப்பாடு போடுங்க” என்று சொல்லும் இளைஞர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.
அவர்கள் சொன்ன உடன் சித்தியோ,
பெரியம்மாவோ, அத்தையோ தட்டை கழுவி அதில் சோற்றைப் போட்டு குழம்பை ஊற்றிக் கொடுக்க வேண்டும். அவன்கள் சாப்பிடும் வரை காத்திருக்க வேண்டும்.
மறுபடி சோறு வேண்டுமா என்று கேட்க வேண்டும். இந்த பத்தியை படிக்கும் பல இளைஞர்கள் இந்த நேரத்தில் கூட இப்படி உங்களை அம்மாவையோ, சித்தியையோ, அத்தையையோ, அக்காவையோ கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கலாம்.
இதை நீங்கள் வேண்டுமென்றே செய்வதில்லை. எப்படி செய்தாலும் பெண்களுக்கு இது கொடுமைதான்.
உங்கள் வீட்டிலேயே கூட உணவு சமைப்பதற்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் கூட உணவு பரிமாறுவதற்கு உதவி செய்யுங்கள்.
கொஞ்சம் சப்பாத்திகள் இருக்கிறது. கொஞ்சம் குருமா இருக்கிறது.
நாலு பேர் இருக்கிறார்கள்.
அதில் மூன்று பேர் ஒரே சமயம் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள் என்றால் நாலாவது ஆளுக்கு குருமா தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
எவ்வளவு குருமா எடுத்து வைக்க வேண்டும் என்று கணக்கு தெரியாது!
ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிட்டால் அவர்களுக்கு அளவும் தெரியும்!
அவர்களும் வயிறார சாப்பிடுவார்கள்!
அனைத்து இல்லதரிசிகளுக்கும் இது சமர்ப்பணம்!