• Fri. Nov 28th, 2025

வட்ஸப்புக்குள் ஊடுருவும் ஹேக்கர்கள்

Byadmin

Dec 2, 2024

இலங்கையில் உள்ள வாட்ஸ்அப் பயனர்களுக்கு இலங்கை கணினி அவசர பதில் மன்றம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

அதன்படி, மூன்றாம் தரப்பினருக்கு அவர்களின் தொலைபேசி இலக்கங்களில் பெறப்பட்ட சரிபார்ப்புக் குறியீட்டை (OTP) வழங்க வேண்டாம் என பயனர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் சமீப காலமாக வாட்ஸ்அப் கணக்குகளில் ஊடுருவி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஹேக்கர்கள் வாட்ஸ்அப் குழுக்களில் இணைந்து பயனர்களின் கணக்குகளை கண்காணிப்பதாகவும் கணக்குகளை ஹேக் செய்த பின்னர், அவர்கள் கடன் கேட்டு ஹேக் செய்யப்பட தொலைபேசியில் உள்ள தொலைபேசி எண்களுக்கு அவசர செய்திகளை அனுப்புவதாகவும் இலங்கை கணினி அவசர பதில் மன்றத்தின் (SLCERT) மூத்த தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“அந்த வகையில், சமய நிகழ்ச்சிகள், பரிசுகளை வெல்வது அல்லது கல்வி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்ற வாய்ப்புகளை குறிப்பிட்டு தொலைபேசி எண்ணில் பெறப்பட்ட ரகசிய குறியீட்டை அவர்கள் கோருவதாக கூறப்படுகிறது.

தங்கள் வாட்ஸ்அப் கணக்கின் ரகசிய குறியீட்டை ஹேக்கர்களிடம் கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு இலகுவில் தங்கள் கணக்கிலும் உட்செல்ல முடியும் எனவும் கூறப்படுகின்றது.

பின்னர் ஹேக்கர்கள் வாட்ஸ்அப் கணக்கை கட்டுப்படுத்தி, அந்த கணக்கில் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களுக்கு பல்வேறு பிரச்சினைகளை கூறி அவசரமாக பணம் அனுப்புமாறு உரிய நபர் கோருவது போலவே குறுஞ்செய்தி அனுப்புகிறார்கள்.

ஆனால், அப்படி ஒரு செய்தி வந்தால், முதலில் அந்தக் கணக்கின் உரிமையாளரைத் தொடர்பு கொண்டு, அந்தத் தகவல் உண்மையா என்பதை உறுதி செய்து, வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகத் தெரிந்தால், அந்தக் கணக்கை வைத்திருப்பவர் உடனடியாக அவருடன் தொடர்புடைய ஏனையவர்களுக்கு அதைப் பற்றி தெரிவிக்கவும்.

மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் ஊடாக இவ்வாறான நிதி மோசடிகளை இலங்கையிலிருந்து இல்லாதொழிக்க முடியும்” என பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *