வெளிநாடுகளிலிருந்து செயற்படும் பாதாள உலக நபர்களை இனங்கண்டு, அவர்களைக் கைது செய்து இலங்கைக்கு கொண்டு வருவதற்கு இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடருக்கான பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத்தில் திங்கட்கிழமை (24) அன்று கூடியது. இதன் போதே பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த அமர்வில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், தேவையான பாதுகாப்பை வழங்குவது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள்ள அச்சுறுத்தல்கள் தொடர்பில் ஆராய்ந்து இறுதி அறிக்கைகளைத் தயாரித்து வருவதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.
அதைவேளை, கடவுச் சீட்டு விநியோக வேலைத் திட்டத்தில். எஞ்சியுள்ள அனைத்து கடவுச்சீட்டுக்களையும் ஒரு மாதத்திற்குள் வழங்கி, அந்தச் செயல்முறையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் கடவுச்சீட்டுக்களை பெறுவதில் பொதுமக்களின் இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் 24 மணி நேரமும் கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.