• Sun. Oct 12th, 2025

6 கழுதைகளுடன் இருவர் கைது

Byadmin

Feb 26, 2025

கற்பிட்டி – கண்டல்குழியில் இருந்து அனுமதிப்பத்திரமின்றி, இரண்டு லொறிகளில் ஆறு கழுதைகளை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டின் கீழ் இருவர் புதன் கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கற்பிட்டி – கண்டல்குழி பகுதியைச் சேர்ந்த இரண்டு லொறிகளின் சாரதிகள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

புதன்கிழமை (26) அதிகாலை கண்டல்குழி பிரதேசத்தில் இருந்து சில கழுதைகள் இரகசியமாக கொண்டு செல்லப்படுவதாக கற்பிட்டி உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இதுபற்றி உதவி பொலிஸ் அத்தியட்சகர் நுரைச்சோலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, நுரைச்சோலை பொலிஸார் மேற்கொண்ட விஷேட சோதனை நடவடிக்கையின் போது பாலாவி – கற்பிட்டி பிரதான வீதியின் நாரக்களி பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் இரண்டு லொறிகளில் ஏற்றிச் சென்ற கழுதைகளையும் பொலிஸார் தமது பொறுப்பில் வைத்துள்ளனர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இந்த கழுதைகள் படல்கம பிரதேசத்தில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றுக்கு வண்டுகளை கட்டுப்படுத்த கொண்டு செல்லப்படுவதாக கூறியுள்ளனர்.

எனினும், குறித்த கழுதைகளை கற்பிட்டி பிரதேசத்தில் இருந்து வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்வதாக இருந்தால்கற்பிட்டி பிரதேச செயலாளரின் முறையான அனுமதி கடிதம் மற்றும் போக்குவரத்துக்கான அனுமதி என்பன பெற்றிருக்க வேண்டும்.

எனினும் சந்தேக நபர்கள் குறித்த கழுதைகளை கொண்டு செல்ல பிரதேச செயலாளரிடம் முறையான அனுமதி பெற்றிருக்காமையினால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த கழுதைகளை இறைச்சிக்காக பயன்படுத்துவதற்கு இவ்வாறு கொண்டு சென்றார்களா என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *