• Sat. Oct 11th, 2025

டிசம்பர் 2-வது வாரத்தில் வீராட்கோலி-அனுஷ்கா இத்தாலியில் திருமணம்?

Byadmin

Oct 25, 2017
கிரிக்கெட் வீரர்களுக்கும், பாலிவுட் நடிகைகளுக்கும் எப்போதுமே தொடர்பு உண்டு. மறைந்த இந்திய அணி முன்னாள் கேப்டன் பட்டோடி பிரபல இந்தி நடிகையாக இருந்த ‌ஷர்மிளா தாகூரை திருமணம் செய்து இருந்தார். அந்த வரிசையில் அசாருதீன் -சங்கீதா பிஜ்லானி, மனோஜ் பிரபாகர்- பர்ஹீன், யுவராஜ்சிங்- ஹாசல்கபூர் திருமணம் நடந்தது.

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரும், இந்திய கிரிக்கெட்டின் 3 நிலைகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) கேப்டனாக இருப்பவருமான வீராட்கோலி இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை நீண்ட காலமாக காதலித்து வருகிறார்.

இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றி திரிந்த படங்களை அவர்களே வெளியிட்டு இருந்தனர். தொடக்கத்தில் அவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு பின்னர் மீண்டும் ஒன்றாக இணைந்தனர்.

இந்த நிலையில் வீராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இவர்களது திருமணம் டிசம்பர் 2-வது வாரத்தில் இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திருமண விழாவில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள்.

திருமணத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது. நவம்பர் 7-ந்தேதியுடன் இந்த தொடர் முடிகிறது.

அதைத் தொடர்ந்து இலங்கை அணி இந்தியா வந்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுகிறது.

இதில் முதல் 2 டெஸ்டில் மட்டும் வீராட்கோலி விளையாடுகிறார். 3-வது டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்படுகிறது. இந்த நேரத்தில் வீராட்கோலி திருமணம் செய்ய இருக்கிறார். கடைசி டெஸ்ட் டிசம்பர் 2-ந்தேதி தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து ஒருநாள் தொடர் டிசம்பர் 10-ந்தேதி தொடங்குகிறது. 17-ந் தேதி வரை ஒருநாள் தொடர் முடிகிறது. 20 ஓவர் தொடர் டிசம்பர் 20-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடக்கிறது.

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடர் அல்லது தென்ஆப்பிரிக்கா பயணத்தின்போது கோலி அணியோடு இணைவார். டிசம்பர் கடைசியில் இந்திய அணி தென்ஆப்பிரிக்கா செல்கிறது. அந்த அணியுடன் 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவரில் விளையாடுகிறது.

கோலிக்கு ஓய்வு கொடுக்கப்படும்போது ரகானே கேப்டனாக நியமிக்கப்படுவார். அவர் தற்போது டெஸ்ட் அணிக்கு துணை கேப்டனாக உள்ளார்.

வீராட்கோலியின் திருமணத்தில் டோனி உள்ளிட்ட இந்திய வீரர்கள் பங்கேற்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திருமண தேதி சமயத்தில்தான் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *