• Sun. Oct 12th, 2025

எமது தேயிலையின் தனித்துவமான சுவை;உலகளவில் பிரபல்பயம் பெற்றுள்ளது

Byadmin

May 23, 2025

சிலோன் டீ’ என்ற பெயரில் தலைமுறை தலைமுறையாக முன்னெடுத்துச் செல்லப்படும் இலங்கைத் தேயிலையின் பெயர், சுதேச பாரம்பரியத்தை உலகிற்குப் பறைசாற்றுகிறது” – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சர்வதேச தேயிலை தினத்துடன் இணைந்ததாக, தேயிலையினால் கட்டியெழுப்பப்படும் சகவாழ்வு: Yaji 2025 சீன-இலங்கை கலாசார விழாவை முன்னிட்டு மே 21 ஆம் திகதி கொழும்பில் உள்ள மரினோ பீச் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்வை இலங்கையில் உள்ள சீன கலாசார மையம், இலங்கையில் உள்ள சீன தூதரகம், சீனாவின் ஜிசாங் நிர்வாக பிராந்தியத்தின் கலாசாரம் மற்றும் சுற்றுலாத் திணைக்களம் மற்றும் சீன கலாசாரம் மற்றும் சுற்றுலா அமைச்சு இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
‍இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

“குறிப்பாக சர்வதேச தேயிலை தினத்தைக் குறிக்கும் இந்த நாளில், தேயிலையினால் கட்டியெழுப்பப்படும் சகவாழ்வு: Yaji 2025 சீன-இலங்கை கலாசார விழாவில் உரையாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது.” இன்றைய தினம் பல நூற்றாண்டுகளாக மக்களையும் கலாசாரங்களையும் ஒன்றிணைத்த ஒரு பானமாக தேயிலையின் கலாசார மதிப்பு, சுகாதார நன்மைகள் மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தை நினைவு கூர்வதற்கான ஒரு வாய்ப்பாகும்.

இலங்கை-சீன நட்புறவு பல நூற்றாண்டுகள் பழமையானது மற்றும் சமய ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் வலுவானது.

எமது தேயிலையின் தனித்துவமான சுவை, மணம் மற்றும் நிறத்திற்காக இலங்கையின் பெயர் உலகளவில் பிரபல்பயம் பெற்றுள்ளது. ‘சிலோன் டீ’ என்ற பெயரில் தலைமுறை தலைமுறையாக முன்னெடுத்துச் செல்லப்படும் இலங்கைத் தேயிலையின் பெயர், சுதேச பாரம்பரியத்தை உலகிற்குப் பறைசாற்றுகிறது.

எனவே, இலங்கை தேயிலை வர்த்தக சின்னத்தை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கு, தேயிலை உற்பத்தி செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும், குறிப்பாக தேயிலை பறிப்பவர்களுக்கு, கடந்த காலங்களில் பல பிரச்சினைகளை எதிர்கொண்ட சேவை வசதிகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை செயற்படுத்துவது முக்கியம். ஒரு அரசாங்கமாக, நாங்கள் அதற்காக உறுதிபூண்டுள்ளோம்.
உலகளாவிய தேயிலை ஏற்றுமதியில் சுமார் 15% பங்களிப்பைச் செய்து இலங்கை இன்று உலகின் மூன்றாவது பெரிய தேயிலை ஏற்றுமதியாளராக மாறியுள்ளது. குறிப்பிடத்தக்க சவால்கள் இருந்தபோதிலும், எமது தேயிலைத் தொழில் 2024 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பதிவு செய்துள்ளது.

இதேபோல், உலகில் உள்ள அனைத்து தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளிலும், சீன சந்தைக்கு தேயிலையை வழங்கும் முக்கிய விநியோகஸ்தராக இலங்கைத் தேயிலை இப்போது மாறியுள்ளது. இலங்கை தேயிலை ஏற்றுமதிக்கான முதல் ஐந்து இடங்களில் சீன சந்தையும் ஒன்றாகும்.

தேயிலை மற்றும் கலாசார பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்ட இத்தகைய நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக இலங்கையில் உள்ள சீனத் தூதரகத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த சகவாழ்வை தேயிலை மூலம் மேலும் மேம்படுத்த நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்.

இந்த நிகழ்வில் சங்கைக்குரிய கிரிந்தே அஸ்ஸஜி நாயக்க தேரர், இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதுவர் சீ ஜாங்ஹோங் மற்றும் சீன மற்றும் இலங்கை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
– பிரதமர் ஊடகப் பிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *