• Sun. Oct 12th, 2025

ஆசிரியர், அதிபர் மீது வாள்வெட்டு

Byadmin

May 25, 2025

மட்டக்களப்பு, அக்கரைப்பற்று  – ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஆசிரியர் மற்றும் அதிபர் ஆகியோர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் விசேட பயிற்சி செயலமர்வு தொடர்பாக, வெள்ளிக்கிழமை (23) மாலை, பாடசாலை மாணவி ஒருவருக்கு அறிவிப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்ற ஆசிரியர் மற்றும் அதிபரே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர்.

வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்ட நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  

ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள பாடசாலையில் கல்வி கற்றுவரும் க.பொ.த.சாதாரண தர  மாணவர்களுக்கு விசேட பயிற்சி செயலமர்வு ஒன்று தம்பட்டை பிரதேசத்தில் சனிக்கிழமை (24) இடம்பெறவுள்ளது.

விசேட பயிற்சி செயலமர்வுக்கு செல்வதற்கு மாணவர்களை ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலைக்கு முன்னால் ஒன்றுகூடுமாறு, அதிபரின் உத்தரவுக்கமைய மாணவர்களின் வீட்டிற்கு சென்று அறிவிப்பதற்காக சம்பவதினம் குறித்த ஆசிரியர் மாணவி ஒருவரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

இந்த நிலையில் குறித்த மாணவிக்கு அறிவித்துவிட்டு அங்கிருந்து வெளியேற முற்பட்ட ஆசிரியரை மாணவியின் சகோதரன் வாளால் வெட்டி தாக்கியதுடன், மோட்டார் சைக்கிளை அடித்து உடைத்துள்ளார்.

அசிரியர் தனக்கு நேர்ந்த கதியை அதிபருக்கு தெரிவித்ததையடுத்து, அதிபர் அங்கு சென்று ஆசிரியரை காப்பாற்ற முற்பட்போது அவர் மீதும் மாணவியின் சகோதரன் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதுடன்.  அவரது மோட்டார் சைக்கிளையும் அடித்து உடைத்துள்ளார். 

இதனையடுத்து வாள்வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்த ஆசிரியர் , அதிபர் ஆகிய இருவரும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலை மேற்கொண்டவரை கைது செய்துள்ளதாகவும் அவர் மதுபோதையில் இருந்துள்ளதாகவும் குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *