மட்டக்களப்பு வவுணதீவில், பக்கத்து வீட்டு காரர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் திங்கட்கிழமை (02) மாலை இடம் பெற்றதுடன் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபரை கைது செய்துள்ளதுடன் துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
கன்னங்குடா பாடசாலை வீதியை சேர்ந்த 28 வயதுடைய பாக்கியராசா சதீஸ்கரன் என்பவர் படுகாயமடைந்துள்ளார். குடி தண்ணீர் பிரச்சனை காரணமாக இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கன்னங்குடா பிரதேசத்தில் துப்பாக்கி சூட்டு இலக்காகி படுகாயமடைந்தவரின் வீட்டுக்கு அருகில் உள்ள அவரது சகோதரனின் காணியில் தேசிய நீர் வழங்கல் சபையினால் குடிநீர் பெற்றுள்ள குடிநீரை பக்கத்து வீட்டைச் சேர்ந்த வரும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவரும் பாவித்து வந்துள்ளனர். இந்நிலையில் அதற்கான பணத்தை செலுத்தாத நிலையில் நீர் வழங்கல் சபையினால் குடிநீர் விநியோகத்தை துண்டித்தனர்.
இது தொடர்பாக குடிநீரை பாவித்து வந்த பக்கத்து வீட்டுகாரிடம் தண்ணீரை பாவித்து விட்டு அதற்கான பணத்தை செலுத்த வில்லை ஏன்? என கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் சம்பவதினமான திங்கட்கிழமை (02) உள்ளுரில் தயாரிக்கப்பட்ட துப்பாகியால் பக்கத்து வீட்டுக்காரர் மீது பிற்பகல் 4.30 மணிக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.. இதனால், தொடையில் துப்பாக்கிச் சன்னம் பாய்ந்த நிலையில் காயமடைந்த அவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதையடுத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சின்வன் என அழைக்கப்படும் அருளானந்தம் யோகேஸ்வரன் என்பவரை கைது செய்ததுடன் துப்பாக்கி ஒன்றையும் மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த வவுணதீவு பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.