கொமர்ஷல் வங்கியானது ஷரியாவுக்கு இணக்கமான வங்கி தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நாடும் வாடிக்கையாளர்களின் வசதி கருதி புறக்கோட்டை பிரதான வீதியில் உள்ள அதன் கிளையில் ஒரு பிரத்தியேக இஸ்லாமிய வங்கி கவுண்டரைத் திறந்துள்ளது. இது கொமர்ஷல் வங்கியால் அமைக்கப்படும் மூன்றாவது இஸ்லாமிய வங்கி;ச் சேவை நிலையமாகும். வங்கியின் இஸ்லாமிய வங்கிப் பிரிவின் பிரதான கிளையானது கொழும்பு 01 இல் உள்ள கொமர்ஷல் வங்கியின் நகர அலுவலகக் கட்டிடத்தில் அமைந்துள்ளது, அதே வேளை மற்றுமொரு பிரத்தியேக இஸ்லாமிய வங்கி கவுண்டர் மட்டக்களப்பில் உள்ள காத்தான்குடியில் உள்ள கிளையில் இயங்குகிறது.
இந்த கவுண்டர்கள் கணக்கு ஆரம்பித்தல், கடன் வசதிகள் மற்றும் வாடிக்கையாளர் சேவை உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய வங்கி சேவைகளை வழங்குகின்றன. மேலும், ஷரியாவுக்கு இணக்கமான வங்கி மற்றும் முதலீட்டு தயாரிப்புகளைத் தேடும் வாடிக்கையாளர்களின் மத நம்பிக்கைகளுக்கு இணங்க வடிவமைக்கப்பட்ட வங்கி தயாரிப்புகள் பற்றி நன்கு அறிந்த ஊழியர்களை கொண்டு இயங்குகின்றன.
கொமர்ஷல் வங்கியினால் அல் அதலா இஸ்லாமிய வங்கிச் சேவையின் கீழ் வழங்கப்படும் தயாரிப்புகளில் வாடியா யாத் தமான் நடைமுறைக் கணக்கு; முதரபா சேமிப்புக் கணக்கு, முதரபா முதலீடுகள், குறைந்து வரும் முஷாரகா, முராபஹா மற்றும் முசாவமா, இஜாரா குத்தகை மற்றும் இறக்குமதி நிதியுதவி ஆகியவை அடங்கும்.
இந்த தயாரிப்புகள் அனைத்தும் வங்கியின் ஷரியா சபையின் வழிகாட்டுதலின் கீழ் வழங்கப்படுவதுடன் இந்த சபையில் அனைத்து பரிவர்த்தனைகளும் ஷரியாவின் கொள்கைகளுக்கு மற்றும் அளவுருக்களுக்கு இணங்குவதை உறுதிசெய்யக்கூடிய இஸ்லாமிய நீதித்துறையின் சிறந்த நிபுணர்கள் உள்ளனர்.
உலகின் முதல் 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி திகழ்வதுடன் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. தனியார் துறையின் மிகப்பாரிய கடன் வழங்குநராக விளங்கும் கொமர்ஷல் வங்கி, SME துறையினருக்கு பாரியளவில் கடனுதவி வழங்கும் கடன் வழங்குநராகவும் உள்ளது. மேலும் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் திகழும் இவ்வங்கி இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலைமையை பேணும் வங்கியாகும். கொமர்ஷல் வங்கி நாடளாவிய ரீதியில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பை செயற்படுத்தி வருகிறது.
மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைத்தீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட முழுமையான Tier I வங்கி மற்றும் மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனத்துடன் சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் நிலையத்தில் (DIFC) பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து வங்கி அண்மையில் ஒப்புதல் பெற்றதுடன் மேலும் இந்த மைல்கல்லை எட்டிய இலங்கையில் முதல் வங்கியாக தன்னை பதிவு செய்துள்ளது, இது அதன் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கிற்கு வழிவகுத்துள்ளது. வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனமான CBC Finance Ltd. அதன் சொந்த கிளை வலையமைப்பு மூலம் பல்வேறு நிதியியல் சேவைகளை வழங்குகிறது.