• Sun. Oct 12th, 2025

ஐ.நா மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகர் இன்று இலங்கை வருகை

Byadmin

Jun 23, 2025

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இன்று (23) இலங்கைக்கு வருகை தரவுள்ளார். 

இன்று முதல் 26 ஆம் திகதி வரை அவர் நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 

2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகர் ஒருவர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும்.  

இந்த விஜயத்தின் போது, ​​உயர்ஸ்தானிகர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோரையும் சந்திக்க உள்ளார். 

அத்தோடு, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் உள்ளிட்ட மேலும் சில அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள், மத தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் இராஜதந்திர சமூக உறுப்பினர்களையும் சந்திக்க உள்ளார். 

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கை விஜயத்தின் போது, ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடு நடத்தவும், மல்வத்தை மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்கர்களை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகரின் இந்தப் பயணத்தின் போது, ​​இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து அதிக அவதானம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.  

மேலும், அவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலைக்கு விஜயம் செய்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *