• Sat. Oct 11th, 2025

மசூதிகளில் ஒலிபெருக்கி தடை: பாங்கு ஓதுவதை ‘அசான்’ செயலியில் கேட்கலாம்

Byadmin

Jul 1, 2025

இஸ்லாமிய மக்கள் வீட்டில் இருந்தபடியே, பாங்கு ஓதுவதை கேட்கும்படியான ‘அசான்’ எனும் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொறியாளர்களால் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது, மும்பையில் உள்ள பாதிக்கும் அதிகமான மசூதிகள் இந்த செயலியில் இணைக்கப்பட்டுள்ளன.

மசூதிகளில் இருந்து அதிக ஒலி எழுப்பப்படுவதாகவும், இதனால் ஒலி மாசு ஏற்படுவதாகவும் மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பு வழங்கியது.

அதில், காலை வேளையில் 55 டெசிபலுக்கு மிகாமலும், இரவு நேரங்களில் 45 டெலிபலுக்கு மிகாமலும் ஒலி எழுப்ப அனுமதி வழங்கப்பட்டது. இதனை மீறுபவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.

இந்த சூழலில், மதம் சார்ந்த தொழுகையில் அரசியல் தலையீடு இருப்பதாக இசுலாமிய தலைவர்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த மென்பொறியாளர்கள் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இப்பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளனர். அதாவது, ‘அசான்’ எனும் ஒரு செயலியை உருவாக்கி, அதன் மூலம் மசூதிகளில் அன்றாடம் ஓதப்படும் பாங்கை இசுலாமியர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடி கேட்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில், மும்பை மாநகரின் பெரும்பாலான மசூதிகள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ‘அசான்’ செயலியின் நிறுவனர்களில் ஒருவரான முகமது அலி கூறுகையில், ஏற்கனவே, தமிழ்நாட்டில் உள்ள சுமார் 250 மசூதிகள் இதில் பதிவு செய்துள்ளன என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *