கொழும்பு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கலானிகம மற்றும் கஹதுடுவ சந்திப்புகளுக்கு இடையில் 9.6 ஆர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை 08 பேரை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று குளிர்சாதன பெட்டியுடன் கூடிய லொறியுடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் 32 வயதுடைய திருமணமாகாத பெண் ஒருவர் உயிரிழந்தார், மேலும் 07 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் நால்வர் ஹோமாகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஒரு பெண் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த மற்ற மூவரும் சிறுவர்களாகும்.அவர்கள் மூவரும் தற்போது களுபோவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
13, 11 மற்றும் 07 வயதுடைய மூவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விபத்தில் பயணித்தவர்கள் நெலுவ, தவலம பகுதியைச் சேர்ந்த ஒரு குழு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சென்ற வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.