வாந்தி எடுத்த மாணவியை பாடசாலையில் இருந்து நீக்கிய அதிபர் இடைநிறுத்தம்
எடுத்த 10 ஆம் ஆண்டு மாணவி ஒருவரை கர்ப்பிணி என கூறி பாடசாலையிலிருந்து நீக்கிய சம்பவத்தையடுத்து பாடசாலை பெண் அதிபர் கடமையிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கெக்கிராவ கல்வி வலயத்தைச் சேர்ந்த மடாட்டுக ரேவத்த மகாவித்தியாலயத்திலேயே மேற்படி சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றிருந்தது.
10 ஆம் ஆண்டு வகுப்பில் கல்வி கற்று வரும் மாணவி ஒருவர் பாடசாலை கல்வி வேளையில் திடீரென வாந்தி எடுத்து உபாதைக்குள்ளானார்.
இதனையடுத்து பாடசாலை அதிபர் இம்மாணவி கர்ப்பிணியாகியுள்ளார் என தெரிவித்து மாணவியை பாடசாலையை விட்டு நீக்கினார்.
இந்த சம்பவத்தை கண்டித்து பெற்றோர் கல்வி அமைச்சர் உட்பட பல உயரதிகாரிகளுக்கு முறைப்பாடு செய்ததுடன் மாணவியை வைத்தியசாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தினர். வைத்தியசாலை பரிசோதனை அறிக்கையில் மாணவி கர்ப்பிணியல்ல என்றும் பசியின் காரணமாகவே வாந்தி எடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்த பாடசாலை பெண் அதிபருக்கு எதிராக பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், மேற்படி அதிபர் கடமையிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன் அவரது நடவடிக்கைகள் குறித்து உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
-அஸீம் கிலாப்தீன்-