ஜிம்பாப்வேவில் நடந்தது ஆட்சிக்கவிழ்ப்பு: ஆஃப்ரிக்க யூனியன் கருத்து
ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேவின் அதிகாரத்தை கைப்பற்றி அவரை ராணுவம் தடுப்புக்காவலில் எடுத்துள்ளது ஆகியவை ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கை போன்றே தோன்றுகிறது என்று ஆஃப்ரிக்க யூனியன் கருத்து தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் ஆல்பா கோண்ட், நாட்டில் அரசியலமைப்பு நிலை உடனடியாக திரும்ப ஆஃப்ரிக்கா யூனியன் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், ஜிம்பாப்வே ராணுவமோ, ஆட்சிக்கவிழ்ப்பை நடத்தவில்லை என்றும், அதிபர் முகாபே பத்திரமாக இருப்பதாகவும், அவரை சுற்றியுள்ள குற்றவாளிகளை எதிர்த்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
முகாபேவுக்கு அடுத்து அதிபர் பதவியில் யார் வருவார்கள் என்ற அதிகார மோதல் ஏற்பட்டதையடுத்து ராணுவம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கடந்த வாரம் ஜிம்பாப்வேயின் துணை அதிபர் எம்மர்சன் மனங்கேக்குவா பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவரது நீக்கம், முகாபேவின் மனைவி கிரேஸ் அதிபர் பதவிக்கு வருவதற்கான சூழ்நிலையை உருவாக்கியது. அதே சமயம், ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் தாங்கள் ஓரங்கட்டப்படுவதை போன்று உணரும் சூழலுக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.