• Sun. Oct 12th, 2025

ஜிம்பாப்வேவில் ராணுவப் புரட்சி?- அரசு தொலைக்காட்சியை கைப்பற்றிய ராணுவம்

Byadmin

Nov 15, 2017

ஜிம்பாப்வேவில் ராணுவப் புரட்சி?- அரசு தொலைக்காட்சியை கைப்பற்றிய ராணுவம்

ஜிம்பாப்வேவில் அரசியல் நெருக்கடி வளர்ந்துவரும் நிலையில் அந்நாட்டு ராணுவ வீரர்கள், அரசு தொலைக்காட்சி நிறுவனமான இசட்.பி.சியின் தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

தொலைக்காட்சியில் தோன்றிய ராணுவத்தினர்,”குற்றவாளிகளை குறிவைத்து” தாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிக்கையை வாசித்தனர்.

இது, அரசைக் கைப்பற்றும் ராணுவ நடவடிக்கையல்ல எனக் கூறியுள்ள ராணுவத்தினர், அதிபர் ராபர்ட் முகாபே பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் ஜிம்பாப்வேவின் தலைநகரான ஹராரேவில் நடந்துள்ளது.

நகரின் வடக்கு புறநகர் பகுதியில், பயங்கர துப்பாக்கிச்சூடு மற்றும் பீரங்கிகளின் சத்தங்களும் கேட்டுள்ளன.

இது குறித்து 93 வயதான அந்நாட்டு அதிபர் ராபர்ட் முகாபேவிடம் இருந்து இதுவரை எந்த வார்த்தையும் வரவில்லை.

ராணுவ புரட்சி எனக் கூறப்படுவதை மறுக்கும் தென் ஆப்ரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே தூதர் ஐசக் மோயோ, அரசு ‘நிலையாக’ உள்ளது என கூறியுள்ளார்.

ராணுவத் தலையீட்டுக்கான சாத்தியங்கள் இருப்பதாக அந்நாட்டு ராணுவ தலைவர் எச்சரிக்கை விடுத்தபிறகு, ஜிம்பாப்வேவின் ஆளுங்கட்சி ராணுவ தலைவர் மீது ‘துரோக’ குற்றச்சாட்டுகளைச் சுமத்திய பிறகு இங்கு நிலைமை மோசமானது.

நாட்டின் துணை அதிபரை அதிபர் ராபர்ட் முகாபே நீக்கியபிறகு, ராணுவத் தலைவர் சிவென்கா, அதிபருக்குச் சவால் விடுத்தார்.

அதிபர் ராபர்ட் முகாபேவின் ‘ஜானு பிஃப்’ கட்சியில் இருப்பவர்கள் களையெடுக்கப்படுவதை தடுத்து நிறுத்த ராணுவம் செயல்பட தயாராக உள்ளது என சிவென்கா கூறியிருந்தார்.

செவ்வாய்க்கிழமையன்று ஆயுதம் தாங்கிய வாகனங்கள் ஹராரேவின் புறநகர் சாலைகளில் நிலைகொண்டதால், பதற்றங்கள் மேலும் அதிகரித்தது.

செவ்வாய்க்கிழமை மாலை ஹராரேவில் உள்ள இசட்.பி.சி அலுவலகத்தை ராணுவ வீரர்கள் கைப்பற்றியபோது, சில ஊழியர்கள் ராணுவ வீரர்களால் இழுத்துத் தள்ளப்பட்டனர் என தகவல்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளது.

ஊழியர்கள் ” கவலைப்பட வேண்டாம்” என்றும், அலுவலகத்தைப் பாதுகாக்கவே தாங்கள் வந்துள்ளதாகவும் ராணுவ வீரர்கள் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.

தற்போது நீக்கப்பட்டுள்ள துணை அதிபர் மனன்காக்வே, நாட்டின் அடுத்த அதிபராவார் என முன்பு பார்க்கப்பட்டது. ஆனால், அதிபர் ராபர்ட் முகாபேவின் மனைவி கிரேஸ் முகாபேதான், அடுத்த அதிபருக்கான போட்டியில் முதலிடத்தில் இருக்கிறார் எனது தற்போது தெளிவாகியுள்ளது.

மனன்காக்வே மற்றும் கிரேஸ் முகாபே இடையிலான சண்டை ஜானு பிஃப் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தியுள்ளது.

மனன்காக்வேவிற்கு ஆதரவளிக்காதவர்களுக்கு அவரின் கூட்டாளிகள் கொலை மிரட்டல் விடுத்து வருவதாகக் கடந்த மாதம் கூறிய கிரேஸ் முகாபே, ராணுவ புரட்சிக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *