போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கான அபராதத் தொகை சட்டத்தில் மாற்றம்..
போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக பொலிஸாரினால் வழங்கப்படும் அபராதப் பணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் 28 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக போக்குவரத்துப் பிரிவு பணிப்பாளர் சுமித் நிஷ்ஷங்க அறிவித்துள்ளார்.
ஏலவே, குறித்த இந்த அபராதத் தொகையினை செலுத்துவதற்கான கால எல்லை 14 நாட்களாக இருந்து வந்தது. ஒருவர் தொடர்ந்தும் 14 நாட்களுக்கு அபராதத் தொகையினை செலுத்தாமல் இருந்து 15 ஆவது நாளை அடைந்து கொள்வாராயின் அவரது தண்டப்பணம் இரட்டிப்பாக்கப்படும் எனவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
உதாரணமாக, வரியுடன் கூடிய தண்டப்பணமாக 500.00 ரூபா நியமிக்கப்படும் ஒருவர் அதனை 14 நாட்களுக்கு செலுத்தவில்லையாயின் 15 ஆவது நாள் முதல் அத்தொகை 1000 ரூபாவாக மாறுவதுடன், 10% வரியும் சேர்ந்து 1100.00 ரூபாவை மொத்த தண்டப்பணமாக செலுத்த வேண்டிவரும்.
தண்டப்பணத்தை ஒருவர் 28 நாட்களுக்குள்ளும் செலுத்தாது போனால், அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படும் எனவும் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.