நாட்டில் பெற்றோல் தட்டுப்பாடு இல்லை என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் உமாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள விசேட அறிவித்தலில் இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“பெற்றோல் தட்டுப்பாடு நிலவுகின்றது என சிலர் வதந்திகளை நாடு பூராகவும் பரப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் எரிபொருள் நிலையங்களில் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
உண்மையில் பெற்றோல் தட்டுப்பாடு நாட்டில் இல்லை, இதனால் மக்கள் தேவையற்ற வகையில் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
இதனால் பொதுமக்கள் மேலதிகமாக எண்ணெய் கொள்வனவு செய்ய வேண்டாம் என மக்களிடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
இந்த நிலை காணப்படும் இடங்களில் பொதுமக்கள் 011-5455130 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி 24 மணித்தியாலங்களுக்குள் அறிவிக்கலாம்.” என தெரிவித்துள்ளார்.