• Sat. Oct 11th, 2025

“இந்த நாட்டில் முஸ்லிம்கள் தொடர்ந்தும் சமாதான விரும்பிகளாக இருந்து வருகின்றனர்” – ரவூப் ஹக்கீம்

Byadmin

Jun 8, 2017
இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம் அல்லது தீவிர வாதம் புகுந்திருப்பதாக மிகவும் விசமத்தனமான பிரசாரங்களை செய்து கொண்டு திரிகின்ற சில குழுக்கள் கடந்த சில  வருடங்களாக அவ்வாறான ஓர் உணர்வை நாட்டின் பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு தொடர்ந்து எத்தனித்து வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் தமது அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (06) மாலை அரச இலத்திரனியல் ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது அமைச்சர் இதனைக் கூறினார்.
அப்பொழுது அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,
எங்களைப் பொறுத்தமட்டில், எங்களுடைய நாட்டில் இவ்விதமான அடிப்படைவாதமோ, தீவிர வாதமோ வேரூன்றுவதற்கு நாங்கள் இடமளிக்கப்போவதில்லை. குறிப்பாக முஸ்லிம்கள் என்ற பெயரில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத, அடிப்படைவாத அமைப்பொன்று செயல்பட்டு வருவதாக சொல்லப்படுவதை கூட நாங்கள் கோட்பாட்டு ரீதியாகவும் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஏனென்றால் பயங்கரவாதத்தோடு தொடர்புபடுத்தி இவர்கள் கூறுகின்ற அடிப்படை வாதம் என்பது இஸ்லாத்திற்கு முரணான விடயமாகும். இஸ்லாத்தில் அவ்வாறான அடிப்படை வாதம் என்று ஒன்று கிடையாது. இஸ்லாம் என்பது ஒரே மார்க்கம் என்பதைத் தவிரவும், அதற்கு வியாக்கியானம் செய்பவர்கள் தாங்கள விரும்பியவாறு தீவிரப் போக்கில் சில விசயங்கள் குறித்து தங்களுடைய விளக்கங்களை கொடுப்பதன் மூலம் முஸ்லிம்களை திசை திருப்புவதற்கு முடியாது.
இந்த நாட்டில் முஸ்லிம்கள் தொடர்ந்தும் சமாதான விரும்பிகளாக இருந்து வருகின்றனர். நாட்டில் யுத்தம் நடந்த கால கட்டத்தில் அதனால் முஸ்லிம்களும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டனர்.
இவ்வாறான சூழ்நிலையில் இந்த நாட்டில் மீண்டும் ஒரு கலவரத்தை தூண்டுவதற்கு எடுக்கப்படுகின்ற முயற்சிகளை முறியடிக்கின்ற நோக்கத்தில் முஸ்லிம்கள் அமைதி பேணுகின்றார்கள், பொறுமைகாக்கின்றார்கள், சகிப்புத் தன்மைகயை உச்சகட்டத்தில் பேணுகின்றார்கள் என்பதையெல்லாம் மறந்து மிக மோசமாகவும் கேவலமாகவும் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் நிந்தித்து வசைபாடித்திரிகின்ற ஒரு கும்பல் முஸ்லிம்களுக்கு மத்தியில் இருந்து தீவிரவாதக் குழுவொன்று இந்த நாட்டிலிருக்கின்ற ஸ்திரத்தன்மையைப் பாதிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்கின்றதென்று பிரசாரம் செய்வது அப்பட்டமான பொய்யாகும்.
முஸ்லிம்களை பொறுத்தமட்டில் அதற்கு அனுசரனையும், அனுக்கிரகமும் எந்த முஸ்லிம் இயக்கத்திலிருந்தும்  கிடைக்கமாட்டது என்பதை நாங்கள் பல தடைவைகள் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றோம்.
அதேவேளை, முஸ்லிம்கள் மீது அக்கிரமங்களைக் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கின்ற சில தீய சக்திகளை சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸார் உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற வினையமான வேண்டுகோள் நீண்ட நாட்களாக விடுக்கப்பட்டு வருகின்னறது.
அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்ற அசம்பாவித சம்பவங்களுக்கு மிக இறுக்கமான தீர்வுகளை காண வேண்டிய கடப்பாடு இந்த ஆட்சியார்களுக்கு இருக்கின்றது என்பதை நாங்கள் மிகவும் திட்டவட்டமாக சொல்லி வருகின்றோம்.
எனவே, முஸ்லிம்கள் இந்த விடயத்தில் இதுவரையும் மிக பொறுப்புணர்ச்சியோடு, பொறுமை காத்து வருகின்றார்கள் என்பதையிட்டு அவர்களை நாங்கள் பாராட்டுகின்ற அதேவேளையில், அரசாங்கத்தை பொறுத்தமட்டில் எந்தவிமான பாரபட்சமோ, பக்கச்சார்போ இல்லாமல் நீதியையும், சட்டத்தையும் நிலைநாட்டுகின்ற கடமையை செய்கின்ற பொறுப்பை அவர்கள் ஏற்றாக வேண்டும் என்பதை மிகவும் வலியுறுத்தி சொல்லி வைக்க விரும்புகின்றோம் என்றார்.

S.MUHAMMAD FARSAN

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *