• Sat. Oct 11th, 2025

கல்முனை முஸ்தபா ஆசிரியரின் மறைவுக்கு கிழக்கு முதல்வர் அனுதாபம்

Byadmin

Jun 8, 2017

இறையடி சேர்ந்த  கல்முனையைச் சேர்ந்த மர்ஹும் எம்.ஐ.எம். முஸ்தபா ஆசிரியரின் மறைவு குறித்து கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தனது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்த அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:

அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி மற்றும் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றின் விரிவுரையாளராக பணிபுரிந்து பல ஆசிரியர்கள் உருவாக்கத்திற்கு காரணமாக இருந்து, பல்வேறு துறைகளில் தனது ஆளுமையை வெளிக்காட்டிய  ஒருவரை இன்று கல்முனை மண் பிரிந்து நிற்கிறது. முஸ்தபா ஆசிரியர் பத்திரிகையாளராக, எழுத்தாளராக, ஆசிரியராக, விளையாட்டு பயிற்சியாளராக, சாரணர் பயிற்சியாளராக, கால்பந்துப் போட்டிகளின் மத்தியஸ்தராக, விரிவுரையாளராக என பல்வேறு துறைகளில் தனது ஆளுமையைத் தடம்பதித்தவர்.

கல்முனை மண் கண்ட ஆளுமைகளில் ஒருவரான எம்.ஐ.எம்.முஸ்தபா ஆசிரியர்  அம்பாறை மாவட்டத்தின் பல பாடசாலைகளில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் விளையாட்டுத்துறையில் அப்பாடசாலைகள் சிறந்து விளங்க அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருக்கிறார்.

அத்தோடு, கல்முனை உட்பட பல பிரதேசங்களின் விளையாட்டுக் கழகங்களின் வளர்ச்சிக்கும், அக்கழக வீரர்களின் திறன் விருத்திக்கும் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டவர்கள். வினையாட்டுத்துறை ஊடாகவும், சாரணியத்தின் மூலமும் பலர் உயர் கல்வி வாய்ப்புக்களைப் பெறவும், பதவிகளை பெற்றுக்கொள்ளவும் அதில் நிரந்தரமாக இருப்பதற்கும் பங்களிப்புச் செய்தவர்.

அதுமாத்திரிமின்றி,  அன்னார் கல்முனையின் மற்றுமொரு ஆளுமையான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தபாகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் பள்ளித் தோழருமாவார்.

மர்ஹும் அஷ்ரபின் அரசியலில் நேரடி பங்களிப்புச் செய்யாத அவர் அஷ்ரபின் அரசியல் வளர்ச்சிக்கான தனது எழுத்தாற்றலை பயன்படுத்தியவர். அஷ்ரபின் மரணத்தின் பின்னர் அவரோடான வாழ்க்கை வரலாறு பற்றி தேசிய பத்திரிகையில் தொடராக எழுதி வந்தமையும் குறிப்பிடத்தக்கது. விளையாட்டுத்தறையின் விருத்திக்காவும், சாரணியத்தின் வளர்ச்சிக்காவும் அர்ப்பணிப்புச் செய்த அன்னாருக்கு அத்துறைகளில் பல்வேறு உயர் பதவிகள் கிடைத்ததுடன் தேசிய மட்டத்தில் பல விருதுகளும், பட்டங்களும் கிடைக்கப்பெற்றன.

அன்னாரின் இழப்பினால் கவலையுற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவர் துக்கத்திலும் பங்கு கொள்வதோடு அன்னாரின் மறுமைவாழ்வுக்காக பிரார்த்திப்பதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

-ஊடக பிரிவு –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *