(சேரிப் பக்கம் வர மாட்டீர்களா? – தலைநகரின் சேரிப்புறத்தில் வாழும் ஓர் அபலையின் மடல்)
அன்புள்ள முஸ்லிம் சமூகத்துக்கு,
நான் ஒரு விதவை. சொந்த வீடில்லை. எனக்கு ஆறு பிள்ளைகள். கணவர் உயிருடன் இருந்த காலத்திலும் நான் அனுபவித்ததெல்லாம் அடியும் உதையும் தான்.
நான் வீடுவீடாகப் போய்த் தேடுகின்ற சிறுதொகைப் பணத்தில் தான் குடும்பத்தின் தேவைகளை சிரமப்பட்டு நிறைவேற்றுகிறேன்.
இப்போது உடம்பிலும் தெம்பில்லை. என்றாலும் வீட்டிலுள்ளவர்களுக்கு ஏதாவது போட வேண்டுமே என்பதற்காக முடிந்தவரை கஷ்டப்படுகிறேன்.
எனதும் என்னைச் சுற்றியுள்ளவர்களதும் வாழ்க்கை இப்படித்தான் கழிகிறது. எங்கள் வாழ்க்கையில் நாங்கள் அனுபவிக்கும் வறுமையை எழுத்தில் எழுதி முடிக்க முடியாது.
சில நேரங்களில் ஒரு நேரச் சாப்பாடு. அதுவும் வெறும் பாண் துண்டு மட்டுமே! கருவாடும் சோறும் கூட எங்களைப் பொறுத்தவரை விஷேசமான சாப்பாடுதான். எப்போதாவது பால் தேநீர் குடிக்கக் கிடைத்தால் எனது பிள்ளைகளுக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா!
வேலைக்குப் போய்வந்து எதையாவது வாங்கிக் கொடுக்கும் வரை, பாடசாலை விட்டு வந்து பசியில் அழுதழுது படுத்திருக்கும் எனது பிள்ளைகளை நினைக்கும் போதுதான் என் நெஞ்சு வெடிக்கிறது.
ஆனால் எங்கள் சமூகத்தில் வசதி படைத்தவர்கள் தங்கள் பிள்ளைகளின் கலியாணங்களில் செய்யும் ஆடம்பரங்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
நாங்கள் ஒரு சீத்தைத் துணிக்கும் வழியில்லாமல் இருக்கும்போது கல்யாண உடுப்புக்குக் கொட்டிச் செலவு செய்வதை எவ்வளவு பெருமையாகப் பேசிக் கொள்கிறார்கள்.
ஒவ்வொரு கலியாணத்திலும் அதற்கு முன்னும் பின்னும் செய்யும் செலவுகளைப் பார்க்கும்போது கதறி அழ வேண்டும் போலிருக்கும்.
அந்தச் செலவுகளில் ஒரு பகுதியைத் தந்தாலும் போதும், சத்தான உணவின்றி, நோஞ்சானாகிப் போகின்ற எனது குடும்பத்தவர்களின் அத்தனை வயிறுகளையும் வருடம் முழுதும் பட்டினி கிடக்காமல் பாதுகாக்கலாம்.
காதிலும் கழுத்திலும் நகைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு போகின்றவர்களைப் பார்க்கும்போது, எங்கள் பட்டினி வயிறுகள் பற்றியெரியும்.
முஸ்லிம்களில் ஏராளமானோருக்கு அல்லாஹ் செல்வத்தை வாரி வழங்கியிருக்கிறான். அல்லாஹ்வின் படைப்புகளாகிய எங்களை ஏழ்மையில் விட்டு வைத்தது பற்றி அல்லாஹ் அவர்களிடம் விசாரிக்கும்போது,
அவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
தங்களுக்கும் தங்கள் மனைவிமாருக்கும் தேவைக்கதிகமாக செலவு செய்து, எங்களுக்குரிய ஹக்கைத் தராமல் போனது பற்றி அல்லாஹ் நிச்சயம் விசாரணை செய்யத்தான் போகிறான். அந்த நாளை அவர்கள் பயப்பட வேண்டாமா?
இந்த வறுமை மட்டும் தான் எங்கள் பிரச்சினையல்ல. எனது பிள்ளைகளை வறுமையிலும் படிப்பித்தேன். மூத்த மகள்களிருவரும் பிற மத இளைஞர்களுடன் போய் விட்டனர். திருமணத்துடன் அவர்கள் மதம் மாறிவிட்டனர். போதைப்பொருளுக்கு அடிமையான மகன் சிங்களப் பெண்ணொருத்தியுடன் வாழ்கிறான்.
இப்படி எங்கள் சூழலில் ஏராளமானோர் பிற மதத்தவர்களைத் திருமணம் செய்து கொண்டு வாழ்கின்றனர்.
இப்படியெல்லாம் நடப்பதற்கு என்ன காரணம் என்று தேடிப் பார்த்தேன். எங்களுக்கு இஸ்லாம் தெரியாததுதான் காரணம் என்பது விளங்கியது.
தொழுகையும் ஓதலும் நோன்பும்தான் இஸ்லாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். குடும்பம் நடத்துவது, பிள்ளைகளை வளர்ப்பது என எல்லாவற்றுக்கும் இஸ்லாமிய வழிமுறை இருக்கிறது என்பது எனக்குத் தெரியாது.
எனக்கு மட்டமல்ல, என்னைச் சுற்றியுள்ள யாருக்குமே தெரியாது. யாரும் வந்து எங்களுக்குச் சொல்லித் தரவுமில்லை.
இஸ்லாம் தெரிந்திருந்தால் எனது குடும்பத்தைப் போல சீரழிந்து போயுள்ள நூற்றுக்கணக்கான குடும்பங்களைக் காப்பாற்றி இருக்கலாம்.
இலங்கையில் ஆயிரக்கணக்கான ஆலிம்கள் இருக்கிறார்கள். எத்தனையோ ஜமாஅத்துகள் இருக்கின்றன. ரமளானில் தராவீஹ் எத்தனை ரக்அத்துகள் தொழுவது என்று சண்டை பிடித்துக் கொண்டு பொலிஸுக்கும் போகிறார்களாம். இன்னும் எதற்காகவோ எல்லாம் சண்டை நடக்கிறதாம்.
இப்படிச் சண்டை பிடிக்கும்போது, ஒரு பர்ளுத் தொழுகை கூடத் தொழாமலிருக்கும் இங்குள்ளவர்களைப் பற்றி யோசித்திருக்கிறீர்களா?
முஸ்லிம்களாகிய நாங்களும் சொர்க்கத்துக்குப் போகக் கூடாதா? இதற்கான வழியை நீங்கள் சொல்லித் தரக் கூடாதா?
டீவியும் ஜாஹிலியத்துமாக எங்கள் பெண்கள் வீணாகிறார்கள். குடியும் குடுவுமாக எங்கள் ஆண்கள் சீரழிகிறார்கள்.
இந்தப்பிரச்சினைகளிலிருந்து வெளியே வந்து, உங்களைப் போல நாங்களும் சந்தோசமாக வாழப் போவது எப்போது? நிம்மதியாக, ஒற்றுமையாக வாழும் குடும்பச் சூழல் எங்களுக்குக் கிடைக்கவே கிடைக்காதா?
ஆடம்பர ஹோட்டல்களில் எல்லாம் இஸ்லாத்தைப் பற்றிப் பெரிய கூட்டங்கள் நடக்கிறதாம். சேரிகளில், ஓலைக்குடிசைகளில் வாழும் எங்களுக்கு ஓர் ஓலைக் கொட்டகையிலாவது இஸ்லாத்தைக் கற்றுத் தர மாட்டீர்களா?
இந்தச் சிக்கல்கள் நீங்க, இந்த உலகிலும் மறு உலகிலும் மன நிம்மதியோடு வாழ எங்களுக்கு வழி காட்ட வேண்டுமென நீங்கள் முயற்சித்தால், இன்ஷா அல்லாஹ் மறுமையில் சந்தோசமாக சொர்க்கம் செல்ல அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான்.
இப்படிக்கு
ஓர் அபலை
(மீள்பதிவு)
-ஷாறா-