• Sun. Oct 12th, 2025

“ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளி விடாதீர்கள்!” – அமைச்சர் ரிசாத்

Byadmin

Mar 7, 2018

(“ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளி விடாதீர்கள்!” – அமைச்சர் ரிசாத்)

இந்த நாட்டில் அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதே அனைவரதும் ஆசையாகும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
இதுவரை உலகத்திலேயே கண்டுபிடிக்கப்படாத ஒரு மருந்தை கொத்துரொட்டியில் கலந்திருப்பதாக கூறி, அந்த கடையை உடைத்து, பள்ளிவாசல்களை உடைத்து இந்த நாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம் சமூகததினரையும் வேதனைப்படுத்தினார்கள்.
இந்த சம்பவம் நடைபெற்று ஒரு மணிநேரத்திலேயே குறித்த பெரும்பான்மையினத்தவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அதையடுத்து பள்ளிவாசல்கள் எமது மக்கள் தாக்கப்பட்டார்கள். ஆனால் பொலிஸார் இதை கவனத்தில் எடுக்கவில்லை.

சிறுபான்மையின மக்கள் இந்த நாட்டில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகவே மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்து அவரை வெற்றிபெறச் செய்தோம்.
ஆகவே அந்த சிறுபான்மையினரை காப்பாற்ற வேண்டியது இந்த அரசாங்கத்தின் கடமை.

குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டால் தான் இன்று நாட்டில் இடம்பெறும் அசம்பாவிதம் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
தெனியாய சம்பவத்தில் 4 பேர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினரையும் காயப்படுததினார்கள்.
முஸ்லிம் இளைஞர் ஒருவரின் வீட்டுக்கு தீ வைத்ததில் அப்பாவி இளைஞன் உயிரிழந்தார். அவருடைய வீட்டுக்கு அருகில் இருந்த பள்ளிவாசலும் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
மகேசன் பலகாய என்ற நபரும், மட்டக்களப்பிலிருந்து வந்த விகாராதிபதியுமே இந்த போராட்டத்திற்கு காரணம்.
இந்த அரசாங்கத்தில் இருக்க வெட்கம் இல்லையா? எங்களை பாதுகாக்க உங்களுக்கு அதிகாரம் இல்லையா? என மிகவும் ஆதங்கத்துடன் அமைச்சர் குறிப்பிட்டார்.

நேற்று இரவு நேரில் சென்று பார்த்த போதுதான் எனக்கு உண்மையான நிலை தெரிந்தது.

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு எம்மை ஏமாற்றிவிட்டார்கள். மீண்டும் இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடவிடுவதற்காகவா இந்த சம்பவம்?

ஜனாதிபதி அமைச்சரவையில் வாக்குறுதி தந்துள்ளார். பிரதமர் இந்த சபையில் வாக்குறுதி தந்துள்ளார். ஆகவே இரு தலைவர்களும் தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
அவ்வாறு இல்லை என்றால் அன்று தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி தமிழ் அரசியல் தலைவர்களை சுட்டுத்தள்ளியதைப் போன்று எம்மையும் ஆயுதம் ஏந்த வைத்துவிட வேண்டாம் என்று மிகவும் ஆதங்கத்துடன் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *