(மக்களுக்காக வாழ்ந்த தலைவர் “பிரேமதாச”)
மக்கள் கனவுகளை மறந்து, தங்களின் தனிப்பட்ட அரசியல் கனவுகளை நிறைவேற்றத் துடிக்கும் நிகழ்கால அரசியல் கலாசாரத்தினுள் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச முன்னுதாரணமானவராக திகழ்ந்தார்.
தமது கனவை நிறைவேற்றுவதற்காகவன்றி மக்களின் கனவுகளை நனவாக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அவர், சுதந்திரமான ஜனநாயக சமுதாயத்தில் வலிமையற்ற, ஏழை மக்களின் வாழ்வை முன்னேற்றுவதற்கான அரசியல் கொள்கை மற்றும் நோக்கத்துடன் செயல்பட்ட சிறந்த தலைவராவார் என ஜனாதிபதி தெரிவித்தார்.
இன்று (01) முற்பகல் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 25வது நினைவஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நிகழ்வில் தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி, கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து மக்கள் அளித்த பொறுப்பு மற்றும் கடந்த அரசை மாற்றியமைப்பதற்காக மக்களிடம் காணப்பட்ட முயற்சி என்பவற்றை
கருத்திற்கொண்டு சகலரும் செயலாற்ற வேண்டுமென தெரிவித்தார்.
முன்னர் இடம்பெற்ற தவறுகள் மீண்டும் ஏற்படாதவாறு சிறந்த ஆட்சி, சிறந்த சமூகம் மற்றும் தூய்மையான அரசியல் இயக்கம் மற்றும் எழை மக்களை நேசிக்கும், மக்களின் இதய துடிப்பை உணர்ந்த மக்கள்நேய பயணத்திற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
ரணசிங்க பிரேமதாச அவர்களின் அரசியல் நோக்கு தொடர்பான புரிந்துணர்வுடன் அவர் எதிரபார்த்த சமூக பரிணாமங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.
பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீர வீராங்கனைகளுக்காக வழங்கப்பட்ட 06 இல்லங்களில் 3 இல்லங்களுக்கும் கொழும்பு மாகாணத்தில் 5,000 குடியிருப்புவாசிகளுக்கு இல்லங்களை வழங்கும் செயற்திட்டத்தை ஆரம்பித்துவைக்கும் முகமாகவும் இதன்போது ஜனாதிபதி வீட்டு உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.
மகா சங்கத்தினர் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், ஹேமா பிரேமதாச அம்மையார் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.