• Sat. Oct 11th, 2025

ரமழானை சிறந்த முறையில் பயன்படுத்துவோம்

Byadmin

May 11, 2018

(ரமழானை சிறந்த முறையில் பயன்படுத்துவோம்)

அல்லாஹ் புனித ரமழான் மாதத்தில் அல்-குர்ஆனை இறக்கி வைத்ததன் மூலம் இதனை சிறப்புப்படுத்தியுள்ளான்.
இது துஆவினதும் பொறுமையினதும் மாதமாகும். மேலும் இது முஸ்லிம்களாகிய நாம் ஆர்வத்தோடும் நிதானத்தோடும் உலமாக்களின் வழிகாட்டலோடும் அதிகமாக நல்லமல்களை நிறைவேற்றும் மாதமுமாகும்.துஆக்கள் அங்கீகரிக்கப்படும் இவ்வரிய மாதத்தைப் பயன்படுத்தி நாம் எமது தேவைகளுக்காகவும் உம்மத்துடைய நலனுக்காகவும் அதிகமாக துஆவில் ஈடுபட வேண்டும். குறிப்பாக அண்மையில் நிகழ்ந்த வன்செயல்கலால்  பாதிக்கப்பட்டவர்களின் துயரங்கள் நீங்கி வழமையான வாழ்வுக்குத் திரும்பவும், நாட்டில் ஒற்றுமை, சகவாழ்வு என்பன நிலவவும் நாம் பிரார்த்திக்க வேண்டும்.

ரமழானில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய ஒழுங்குகளும் ஆலோசனைகளும் பின்வருமாறு:

அல்-குர்ஆன் இறக்கப்பட்ட மாதமான ரமழானில் அதிகளவு அல்-குர்ஆனை ஓதுதல் மற்றும் அதனை விளங்கி நடைமுறைப்படுத்தல்.
இபாதத்களில் அதிகளவு கவனம் செலுத்துவதுடன் இரவு நேர வணக்கங்களில் ஈடுபடுதல். இதன் மூலம் நேரத்தை வீணாக்குவதைத் தவிர்ந்து கொள்ளல்.
கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்ளாது உலமாக்களின் வழிகாட்டலுக்கு ஏற்ப நிதானத்துடன் நடந்து கொள்ளல்.

ஆடம்பர இப்தார் நிகழ்ச்சிகள் போன்ற அவசியமற்ற செலவுகளைத் தவிர்த்து ஏழைகளையும் தேவையுடையோரையும் அடையாளம் கண்டு ஸக்காத் சதகா போன்றவற்றை வழங்கி உதவி செய்தல்.

ஏழைகளுக்கு ஸஹ்ர் மற்றும் இப்தாருக்கான ஏற்பாடுகளை செய்தல்.
இளைஞர்கள் மஸ்ஜித்களில் இபாதத்கள் முடிந்தவுடன், இரவு நேரங்களில் பாதைகளில் விளையாடுதல் போன்ற பிறருக்கு இடையூறு செய்யும் விடயங்களை முற்றாகத் தவிர்ந்து கொள்ளல். மேலும் பெற்றோரும் பொறுப்புவாய்ந்தவர்களும் இவ்விடயத்தில் கண்காணிப்புடன் செயற்படல்.
இரவுநேர இபாதத்களில் ஈடுபடும் போதும் பயான்களின் போதும் பிறருக்கு இடையூறு ஏற்றபடாத வகையில் ஒலிபெருக்கி சத்தத்தை மஸ்ஜிதுக்குள் மாத்திரம் வைத்துக் கொள்ளல்.

ஸஹர் நேரங்களில் பிறருக்கு இடையூறு ஏற்படும் வகையில் வானொலிச் சத்தத்தை உயர்த்தாதிருத்தல்.

உங்கள் வீடுகளில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை அயலிலுள்ள முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதோர் அனைவருக்கும் கொடுத்தல் போன்ற நற்பணிகளில் ஈடுபடுதல்.

பெண்கள் தொழுகைக்காக வெளியில் செல்லும் போது ஷரீஆ வரையறைகளைப் பேணி உரிய பாதுகாப்புடன் செல்லல். ஆண்கள் இது குறித்து சிறந்த ஏற்பாடுகளை செய்து கொடுத்தல்.

மஸ்ஜித்களுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தும் போது பாதசாரிகள் மற்றும் ஏனைய வாகனங்களுக்கு இடைஞ்சல் இல்லாது நடந்து கொள்ளல்.
மேற்படி விடயங்களை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிளைகளும் மஸ்ஜித் நிர்வாகங்களும் முஸ்லிம் சமூகமும் ஒத்துழைப்புடன் செயற்படல்.

எனவே, இப்புனித ரமழானை சரியாகப் பயன்படுத்திக் கொள்வோமாக. எல்லாம் வல்ல அல்லாஹ் எமது பிரார்த்தனைகளை அங்கீகரித்து நாட்டில் ஐக்கியம், சகவாழ்வு வளரவும் புரிந்துணர்வோடு வாழவும் நல்லருள் பாலிப்பானாக.

வஸ்ஸலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *